Published : 30 Mar 2017 08:48 AM
Last Updated : 30 Mar 2017 08:48 AM

வடசென்னையின் தீராப் பிரச்சினை: நெரிசலை ஏற்படுத்தும் ஆர்.கே.நகர் ஆக்கிரமிப்புகள் - கட்டுப்படுத்தப்படுமா கன்டெய்னர் லாரிகள்?

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் எண்ணூர் மணலி துறைமுக சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் துறைமுகத்துக்கு வரும் கன்டெய்னர் லாரிகளால்தான் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் தீராப் பிரச்சினையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

சென்னை மணலியில் உள்ள கன்டெய்னர் சரக்கு முனையத்தில் இருந்து துறைமுகத்துக்குச் செல்லும் கன்டெய்னர் லாரிகளால் வடசென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், 1998-ம் ஆண்டு ரூ.600 கோடி மதிப்பில் எண்ணூர் - மணலி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் வரை கடற்கரையை ஒட்டி சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும், நெரிசல் பிரச்சினை தீரவில்லை. இதனால் ஆர்.கே.நகர் பகுதி மக்கள் உட்பட வடசென்னை மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை

இதுகுறித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘இந்தச் சாலையில் ஒருசில இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம். ஆக்கிரமிப்பால் பல இடங்களில் சாலை குறுகிவிட்டது. உதாரணமாக, ஆர்.கே.நகர் தொகுதியை ஒட்டி அமைந்துள்ள நல்லதண்ணீர் ஓடைக்குப்பத்தில் மீனவர்களின் வீடுகள் சாலையை ஆக்கிமிரத்து உள்ளன. மாற்று இடம் தருவதாக கூறியும் அவர்கள் காலிசெய்ய மறுக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து சீராகும்’’ என்றனர்.

இதுபற்றி அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:

இணைப்பு சாலை பணி மந்தம்

ஆர்.கே.நகர் தொகுதியில் பழைய என்-4 காவல் நிலையத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு இந்தச் சாலை உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இதன் இணைப்புச் சாலை பணிகள் மிக மந்தமாக நடக்கின்றன. நெரிசலுக்கு இதுவும் காரணம். இப்பணி முடிந்தால் துறைமுகத்துக்குச் செல்லும் சாலையை இருவழிப்பாதையாக அமைக்க முடியும். நெரிசல் பிரச்சினையும் தீரும்.

லாரிகளால் நெரிசல்

சில நேரம், சென்னை துறைமுகத்துக்கு வரும் லாரிகள், ஜீரோ எண் நுழைவாயிலுக்கு பதிலாக, 3-ம் எண் நுழைவாயில் வழியாக திருப்பி விடப்படுகின்றன. இவை சூரியநாராயணா தெரு, காசிமேடு சிக்னல், கொடிமரத் தெரு வழியாகச் செல்லும்போது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘துறைமுகத்தில் கன்டெய்னர் சரக்குகளை கையாள 2 ஸ்கேனர் கருவிகள் மட்டுமே உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது. கன்டெய்னர்கள் காத்திருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. கூடுதல் ஸ்கேனர் கருவிகளை நிறுவுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x