

சென்னை குடிநீர் தேவைக்கு தனது பங்காக கொடுக்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கிவிட்டதால், மேலும் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று ஆந்திர அரசு தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது. இதனால், வடகிழக்குப் பருவ மழையையே சென்னைக் குடிநீர் வாரியம் பெரிதும் நம்பியுள்ளது. சென்னை நகரில் பெருகி வரும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1975-ம் ஆண்டுவாக்கில் தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கிருஷ்ணா நதி, மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி கர்நாடகம், தெலங்கானா மாநிலங்கள் வழியாக ஓடி ஆந்திர மாநிலத்தில் கடலில் கலப்பதால், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒருங் கிணைந்த ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களும் தலா 5 டி.எம்.சி. வீதம் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை வழங்குவதற்கான ஒப்பந் தத்தில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி உத்தரவின்பேரில் 3 மாநில முதல்வர்களும் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து 1984-ம் ஆண்டு மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களிடம் இருந்து கிருஷ்ணா நீரைப் பெற்று சென்னைக்கு வழங்குவதற்கான தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதையடுத்து ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி வரை 176 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா நீர் கால்வாய் வெட்டப்பட்டு 1996-ம் ஆண்டு முதல் ஆந்திரத்தில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின் படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும்.
கடந்தாண்டு ஜூலை 7-ம் தேதி முதல், இந்தாண்டு ஜூன் வரை 5.66 டிஎம்சியும், ஆகஸ்டு 5-ம் தேதி முதல் நேற்று வரை 1.58 டிஎம்சியும் கிருஷ்ணா நீர் வந்துள்ளது. கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதை ஆந்திர அரசு அண்மையில் நிறுத்தியது. அதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
3 மாநில ஒப்பந்தத்தின்படி தனது பங்கான 5 டிஎம்சி கிருஷ்ணா நீரை கொடுத்துவிட்டதாகவும், இனிமேல் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்கள் தங்களது பங்காக கிருஷ்ணா நீரைத் திறந்துவிட்ட பிறகே அதனை வழங்க முடியும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநிலங்களில் கிருஷ்ணா நீரைப் பெற்று சென்னைக்கு வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர அரசை தமிழக அரசு உயர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி. தற்போது 2,009 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதைக் கொண்டு அடுத்த மாதம் இறுதிவரை சமாளிக்கலாம். அதற்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, ஏரிகளுக்கு நீர் வரத் தொடங்கிவிடும். கடந்த ஆண்டு இதேநாளில் ஏரிகளில் 1,993 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது. இருந்தாலும், வடகிழக்கு பருவமழை நீர் மற்றும் கிருஷ்ணா நீரைக் கொண்டு சென்னையின் குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டது. அதுபோலவே இந்தாண்டும் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.