Published : 08 Jun 2016 08:44 AM
Last Updated : 08 Jun 2016 08:44 AM

அடுத்த தலைமுறையை சூனியமாக்கும் குழந்தைத் திருமணங்கள்: திகைக்க வைக்கும் பின்னணித் தகவல்கள்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள (NFHS: 4 - 2015-16) 4-வது ஆய்வறிக்கையின் முடிவுகள் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் (கடந்த 10 ஆண்டு களை ஒப்பிடும்போது) குறைந்திருப்பதாக சொல்கிறது. ஆனால், ‘‘உண்மை நிலவரம் அதுவல்ல. குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது’’ என்கிறார்கள் களம் சார்ந்த நிபுணர்கள்.

பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 என திருமண வயது வரையறுக் கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை தொடுவதற்குள் திரு மணம் செய்தால் அது குழந்தை திருமணம். இத்தகைய குழந்தைத் திருமணங்களில் சம்பந்தப்படும் அனைவருக்கும் தண்டனை நிச்ச யம் என சட்டம் சொன்னாலும் பல்வேறு காரணங்களால் குழந் தைத் திருமணங்களை முற்றாக ஒழிக்கவே முடியவில்லை.

மிரட்டும் பிஹார், மேற்கு வங்கம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 4-வது கள ஆய்வுகள், கடந்த ஆறு ஆண்டு களில் தேசிய அளவில் மேற்கு வங்கத்திலும் பிஹாரிலும் அதிக அளவில் (சுமார் 40 சதவீதம்) குழந்தை திருமணங்கள் நடந்திருப் பதாக புள்ளிவிவரம் தருகின்றன. இதுவே கடந்த 2005-06ல் நடத்தப் பட்ட மூன்றாவது கள ஆய்வு, அதற்கு முந்தைய ஆறு ஆண்டு களில் மேற்கு வங்கத்தில் 53 சத வீதம், பிஹாரில் 60 சதவீதம் அள வுக்கு குழந்தைத் திருமணங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மிகையும் இல்லாமல் குறையும் இல்லாமல் கடந்த ஆறாண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் சுமார் 15 சதவீதம் அளவில் நடந்திருக் கின்றன. இதில் கிராமப்புறங்களில் 18.3 சதவீதமும் நகர்புறங்களில் 13 சதவீதமும் நடந்திருக்கின்றன. இதுவே கடந்த 2005-06 ஆய்வில், தமிழக குழந்தைத் திருமணங்கள் 21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மடங்கு அதிகமாக இருக்கும்

‘‘குறிப்பிட்ட பகுதிகளில் குறிப் பிட்ட எண்ணிக்கையிலான மக்க ளைச் சந்தித்துப் பேசி எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நான்காவது ஆய்வறிக்கைகளை சுகாதார அமைச்சகம் பார்வைக்கு வைத்திருக்கிறது. ஆனால், இது சரியான கணக்கு அல்ல. பெரும் பாலான குழந்தைத் திருமணங்கள் வெளியில் தெரிவதில்லை. பிரசவ காலத்தில் தெரியவந்தாலும் வயதை அதிகப்படுத்திச் சொல்லி உண்மையை மறைத்துவிடுகிறார் கள். எனவே, அரசின் புள்ளிவிவர எண்ணிக்கையைப் போல இன்னும் ஒரு மடங்கு அதிகமாகவே குழந் தைத் திருமணங்கள் நடந்தி ருக்கும்’’ என்கிறார்கள் குழந்தைத் திருமணங்களை தடுக்கும் தளத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள்.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்

தமிழகத்தில் கோவை, திண்டுக் கல், மதுரை, சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, நீலகிரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் அகிய 12 மாவட்டங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதம் அளவுக்கு குழந்தைத் திருமணங்கள் நடந்திருப்பதாக அறிக்கை சொல்கிறது. இதில் அதிகபட்சமாக தேனியில் 26.7 சதவீதமும் தருமபுரியில் 27.9 சதவீதமும் நடந்துள்ளன. இந்த 12 மாவட்டங்களிலும் குழந்தைத் திருமணங்களை செய்துகொண்ட வர்களில் சராசரியாக 10 சதவீதம் பேர் இப்போது தாய்மை அடைந் துள்ளனர். அதே சமயம், மூன்றா வது கள ஆய்வின்போது தமிழகத் தில் குழந்தை திருமணம் செய் யும் ஆண்களின் சராசரி 14 சதவீதமாக இருந்தது இந்த ஆய்வின்போது 17 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் சிசு மற்றும் கரு கொலைகள் அதிகம் நடக்கும் மாவட் டங்களிலும், ஆணவக் கொலை களின் அச்சுறுத்தல் உள்ள மாவட் டங்களிலும் குழந்தைத் திருமண நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. அரசின் புள்ளிவிவர பாதையும் இதை ஒட்டியே செல்கிறது. ஆக, பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததும் சாதிய முமே குழந்தைத் திருமணங்களை தீர்மானிக்கும் முக்கியக் காரணி களாக அமைக்கின்றன. இந்தத் திரு மணங்கள் பெண்களின் அறிவு வளர்ச்சியை முடக்கி அடுத்த தலைமுறையை சூனியமாக்கு கிறது என்பது அதிர்ச்சியூட்டும் விஷயம்.

ஏன் தடுக்க முடியவில்லை?

‘‘நகரங்களை விட கிராமங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தொழில் நிமித்தமாக கிராமத்து மக்கள் வெளியிடங்களுக்கு இடம்பெயர வேண்டி இருக்கிறது. அதுபோன்ற சூழலில் வீட்டில் தங்களது பெண்குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இதில்லாமல், பெரும்பாலான கிராமங்களில் இன்னமும் சாதிய கட்டுமானம் உடைக்க முடியாத அரணாக நிற்கிறது. அதனால், படிப்புக்காக பக்கத்து ஊர்களுக்கு நகரும் பெண்கள் வேற்று சாதி ஆணுடன் ஓடிப்போய்விடுவார்களோ என்ற கவலை பெற்றோருக்கு இயல்பாகவே வருகிறது.

இன்னொரு முக்கியப் பிரச்சினை, உறவு முறை திருமணங்கள். வயது வித்தியாசம் பெரிதாக இருந்தாலும் முறைப் பையனுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுப்பதை கவுரமாக நினைக்கிறார்கள் கிராமத் துப் பெற்றோர். இதுபோன்ற கார ணங்களால் பெண் குழந்தை களுக்கு சீக்கிரமே திருமணத்தை முடித்து பொறுப்பை நிறைவு செய்ய அவசரப்படுகிறார்கள். இதனால்தான் குழந்தைத் திரு மணங்களை முழுவதுமாக தடுக்க முடியவில்லை’’ என்கிறார் குழந் தைகள் உரிமைக்கான செயல் பாட்டாளர் பி.பவளம்.

வன்முறைக்கு ஆளாகும் பெண்கள்

குழந்தைத் திருமணத்துக்கு ஆட்படுத்தப்படும் பெண்கள், முடி வெடுக்கும் பக்குவம் இல்லாமல் இருப்பதால் இவர்களில் அநேகம் பேர் குடும்ப வன்முறையை அனுபவிக்கிறார்கள். 30 வருடங் களுக்கும் மேலாக பெண் சிசு, கரு கொலைகளை சந்தித்து வரும் மாவட்டங்களில், பருவத்துக்கு வந்த ஆண்களின் எண்ணிக் கையைவிட பருவ பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பெண்கள் பூப்பெய்திய சில மாதங்களி லேயே திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். இதனால், உடல் ரீதியாக தயாராகும் முன்பாகவே பெண்கள் கருத்தரிக்கிறார்கள். இதனால், தாயின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் அவள் சுமக் கும் கருவும் ஊட்டச் சத்துக் குறைவால் ஆரோக்கியம் குன்றி வளர்கிறது.

சராசரி பெண்களைவிட குழந் தைத் திருமணம் செய்துகொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறப்பது மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. இரண்டு வருடங்களுக்கு முன்பு, தருமபுரி மாவட்டத்தில், ஒரு வயதைத் தொட்ட குழந்தைகள் மொத்தம் மொத்தமாக செத்து மடிந்தன. இதில் பெரும்பாலானவை குழந்தைத் திருமண தம்பதியரின் குழந்தைகள்.

குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் ‘சைல்டு லைன் இந்தியா’ மற்றும் ‘இந்திய குழந்தைகள் நலச் சங்கம்’ அமைப்புகள் முக் கியப் பங்காற்றுகின்றன. சைல்டு லைன் அமைப்பின் 24 மணி நேர சேவையான 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் குழந்தைத் திருமணம் பற்றிய தகவலைச் சொன்னால் போதும். அதிகபட்சம் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களத்துக்கு வந்து விடுவார்கள்.

இது குறித்துப் பேசிய இந்திய குழந்தைகள் நல சங்கத்தினர், ‘‘குழந்தைத் திருமணங்களை நிறுத் தும்போது, சம்பந்தப்பட்ட பெற் றோர் இருவரையும் அழைத்துப் பேசி உரிய வயது வருவதற்குள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம்’ என பத்திரத் தில் எழுதிக் கைழுத்துப் பெறப் படும். அதற்குப் பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பெண் குழந்தையை நேரில் ஆஜர் செய்ய வைத்து அப்பெண்ணுக்குத் திருமணம் நடக்கவில்லை என்பதை சமூக நலத்துறை அதிகாரிகள் உறுதி செய்வார்கள். குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை அளிப்பதுடன் தொழில்பயிற்சியும் அளிக்கப்படும் விரும்பினால் படிப்பைப் தொடர வும் வழி செய்யப்படும்’’ என்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை ஆவடி, சைதாப் பேட்டை, தி.நகர், கோயம்பேடு, கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளும் கடலூர் மாவட்டமும் இந்திய குழந்தைகள் நல சங்கத்தின் கண்காணிப்பில் உள்ளது. இதுதவிர சென்னையில் மேலும் 6 என்.ஜி.ஓ-க்களும் இந்த சேவையில் ஈடுபட்டுள்ளன. பெரும் பாலான மாவட்டங்களில் என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்து சமூக நலத்துறையின் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மார்ச்சுடன் முடிந்த ஒரு ஆண்டில் சென்னையில் 18 கடலூரில் 53 என மொத்தம் 71 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது குழந்தைகள் நல சங்கம்.

- தொடர்ச்சி நாளை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x