

தனியார் பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியின்போது ‘போர்டிகோ’ சிமென்ட் தளம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது, இந்தப் பள்ளிக்காக காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பிரதானக் கட்டிடத்தின் முன்பு 20 அடி அகலம் 20 அடி நீளம் கொண்ட ‘போர்டிகோ’ கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக, தூண்கள் எழுப்பப்பட்ட நிலையில் நேற்று சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்தத் தளம் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர். கட்டிடத்தின் மற்ற பகுதியில் வேலை செய்தவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விரைவு
தகவலறிந்த காட்பாடி போலீ ஸார் மற்றும் தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தில் 4 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். 3 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடு களில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறும்போது, ‘‘காயமடைந்தவர் களில் 7 பேர் வேலூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யிலும், 3 பேர் காட்பாடி தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் வேலூர் சிஎம்சி மருத் துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட னர். சிஎம்சியில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ்(45) என்பவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 2 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். தொழிலாளர்களிடம் விசாரித்தபோது மற்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரி வித்தனர்’’ என்றார்.