

2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 756 காவல் உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.
தமிழக காவல் துறையில் 2004-ம் ஆண்டு 956 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 200 பேர் ஏற்கெனவே காவல் துறையில் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்கள். மீதமுள்ள 756 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்கள். காவல் துறையில் ஏற்கெனவே பணிபுரிந்து பதவி உயர்வு பெற்ற 200 பேரில் 75 பேர், உதவி ஆய்வாளர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிக்கு வரவில்லை. உடல்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அவர்கள் ஒரு ஆண்டு தாமதமாக பயிற்சி முடித்து உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தனர். இந்த 200 பேரில் 195 பேர் இப்போது காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். துறை ரீதியான சில காரணங்களால் மீதமுள்ள 5 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
195 பேர் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில், 2004-ம் ஆண்டு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 756 உதவி ஆய்வாளர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் தரப்பில் கூறியதாவது:
உதவி ஆய்வாளராக அதிகபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தாலே, காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் நாங்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி ஆய்வாளராகவே பணிபுரிந்து வருகிறோம். ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்பவர்களுக்கு ஒருநாள் கூட தாமதம் ஏற்படாமல் பதவி உயர்வு வழங்கும்போது, எங்களை மட்டும் ஏன் வஞ்சிக்கிறார்கள்.
உதவி ஆய்வாளர் பயிற்சியில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படும். பணிபுரியும் காலத்தில் துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் மட்டும் அவரது பதவி உயர்வு தாமதப்படும். பதவி உயர்வு பெறுபவர்களின் சீனியாரிட்டி பட்டியலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் பார்த்து வந்தோம். தற்போது அந்த பட்டியலை பார்ப்பதற்கும் எங்களுக்கு தடை விதித்து விட்டனர். தமிழகத்தில் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான காவல் ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி இருக்கும்போது எங்களுக்கு ஏன் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர் என்று புரியவில்லை.
இவ்வாறு அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உதவி ஆய்வாளர்களுக்கு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்குவது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பதவி உயர்வு வழங்குவது குறித்து சீனியாரிட்டி பட்டியல் தயாராகி விட்டது. அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் பதவி உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனர்.