Last Updated : 12 Sep, 2016 09:55 AM

 

Published : 12 Sep 2016 09:55 AM
Last Updated : 12 Sep 2016 09:55 AM

மழைநீர் வடிகால்கள் சரி செய்யப்படுமா?- சாலைகள் உயர்த்தப்பட்டதால் வெள்ள அபாயத்தில் பெரம்பூர் தெருக்கள்

கடந்த ஆண்டு பெய்த பெரு மழைக்குப் பிறகு பிரதான சாலைகள் உயர்த்தப்பட்டதால் பெரம்பூரில் பல தெருக்களில் வீடு களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 நவம்பர், டிசம்பரில் பெய்த பெருமழை, வெள்ளத்தால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த தால் மக்கள் பெரும் அவதிக் குள்ளானார்கள். பல நூறு கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

பெருமழை, வெள்ளத்தில் தெருக்களில் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கி நின்றால் சாலைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. எனவே, மழை நின்று இயல்பு நிலை திரும்பிய பிறகு சாலைகள் துரித கதியில் சீரமைக்கப்பட்டன.

பெரம்பூர் ரயில் நிலையத்தி லிருந்து பேருந்து நிலையம், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வழியாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையை இணைக்கும் பெரம்பூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு உயர்த்தப் பட்டுள்ளது.

அதுபோல பெரம்பூர் நெடுஞ் சாலையிலிருந்து வடிவேல் முதலி பிரதான சாலையை இணைக்கும் பாரதி சாலை, நெல்வயல் சாலை உள்ளிட்ட சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் தாழ்வான தெருக்களான சீனிவாச ஆச்சாரி தெரு, சீனிவாச முதலி தெரு, ராமகிருஷ்ணா தெரு ஆகிய தெருக்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பரில் இந்த தெருக்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. படகுகளில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பிரதான சாலைகள் உயர்த்தப் பட்டதன் அபாயத்தை கடந்த மே மாதம் முதல் பெய்து வரும் சாதாரண மழையின்போது மக்களால் உணர முடிந்தது. சில மணி நேரங்கள் பெய்த மழைக்கே இந்த தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இரு சக்கர வாகனங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

இதுபற்றி சீனிவாச முதலி தெருவில் 45 ஆண்டுகளாக வசிக்கும் உபேந்திரன் கூறும் போது, ‘‘கடந்த மழைக்குப் பிறகு முக்கிய சாலைகள் மிகவும் உயரமாக போடப்பட்டுள்ளதால் பெரம்பூர் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தண்ணீர் ஆறாக பாய்ந்து சீனிவாசன் தெரு, ராமகிருஷ்ணன் தெருக்களில் வந்து தேங்குகிறது. இந்த தெருக்களுக்கு அடுத்துள்ள குமாரசாமி தெருவும் உயரமாக்கப் பட்டுள்ளதால் தண்ணீர் வெளி யேற வழியில்லை. முன்பெல்லாம் 3 அல்லது 4 நாள்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் தண்ணீர் தேங்கும். சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் இப்போது 2 மணி நேர மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

வெள்ள அபாயத்தை சிறுசிறு மழைகளே உணர்த்தியதால் வரும் நவம்பர், டிசம்பரில் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால் இப்பகுதிகளில் தரைத்தள வீடுகளில் யாரும் குடியிருக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

மழை காலத்துக்கு முன்பாக இந்த தெருக்களில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேற கால்வாய்களை அமைக்க வேண்டும். தெருக்களின் உயரத்துக்கு ஏற்பவே, பிரதான சாலைகளை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x