

இலங்கையில் இருந்து கோவா வுக்கு சென்ற புதிய சொகுசு படகு மீனவர்களுடன் சின்னமுட்டம் துறை முகத்தில் நுழைந்தது. துறைமுக படகு தளத்துக்கு வரும் வரை கடற்படை போலீஸாரின் கண்ணில் படகு தென்படாததால் பரபரப்பு நிலவியது.
கிழக்கு கடல் பகுதியில் விசைப் படகுகளுக்கான மீன்பிடி தடைக் காலம் உள்ள நிலையில், இலங்கை மற்றும் கேரள மீனவர்கள் விசைப் படகுகளில் தடையை மீறி ஆழ் கடலில் மீன்பிடித்து வருவதாக வும், இதைத் தடுக்க இந்திய கடற்படையினர் முறையாக நட வடிக்கை எடுக்கவில்லை எனவும், மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை உல்லாச சொகுசு படகு ஒன்று கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைந்தது. படகு தளத்தில் அந்த சொகுசு படகு நின்ற பின்னரே, போலீஸார் அதைப் பார்த்தனர்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் சொகுசு படகுக்குள் சென்று விசாரித் தனர். அதில் 4 மீனவர்கள் இருந்த னர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்தசொகுசு கப்பல் தயார் செய் யும் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாத் பெர்னாண்டோ, ஜீட் பெர் னாண்டோ, ஜாபிளி நாயக்கே, சுதர்சன் பெர்னாண்டோ என தெரியவந்தது.
மேலும், அந்த சொகுசு படகில் 15 பேர் அமரும் வகையில் இருக்கை மற்றும் படுக்கையுடன் குளிர்சாதன ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மும்பை யைச் சேர்ந்த கவுதம் தத்தா என்பவர், கோவாவில் சுற்றுலாப் பயணிகளின் உல்லாச படகு சவாரிக்காக இந்த சொகுசு படகை இலங்கையில் தயார் செய்திருப்பது தெரியவந்தது. இப்படகை கன்னி யாகுமரி, கொச்சி வழியாக கோவா கொண்டுசெல்லும் வழியில் எரி பொருள் தீர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2 பேரல்களில் எரி பொருள் நிரப்புவதற்காக சின்னமுட் டம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நிறுத்தியுள்ளனர்.
சொகுசு படகு நிற்பதை அறிந்த சின்னமுட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள், க்யூ பிராஞ்ச் போலீ ஸார் அங்கு குவிந்தனர். அவர்கள் சொகுசு படகில் இருந்த 4 மீன வர்களிடமும் விசாரணை நடத்தினர். படகுக்கான உரிமம் மற்றும் ஆவணங்கள் முறையாக இருந்தது தெரியவந்தது. மேலும், செல்லும் வழியில் உள்ள துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியும் வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, துறைரீதி யாக சொகுசு படகு குறித்த அனு மதிக் கடிதம் வந்தபின், அங்கிருந்து செல்ல அனுமதிப்பதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் விமர்சனம்
இலங்கையில் இருந்து சொகுசு படகு வந்தபோது 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கூட இந்திய கடற்படையினர் கண் ணில் அது தென்படவில்லை. அவ் வப்போது நடத்தும் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை அனைத்தும் பெயர ளவுக்குத்தானா? என மீனவர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.