

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலதிபர் ரஞ்சித் ஷா என்பவர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
பழங்கால கற்சிலைகள், உலோக சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை திருடியதாக கூறப்பட்டதன் பேரில் ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் வீடு மற்றும் குடோனில் அண்மையில் சோதனை நடத்தப் பட்டது. இந்த சோதனைகளின்போது கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப் பட்டன. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீனதாயளன் கடந்த மாதம் சரணடைந்தார்.
மேலும், காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்கும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிலை தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலதிபர் ரஞ்சித் ஷா வீட்டில் ஏராளமான சிலைகள் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், ரஞ்சித் ஷா வீட்டில் அவர்கள் சோதனை நடத்தினர்.
ரஞ்சித் ஷா வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 40 கற்சிலைகள் மற்றும் உலோக சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ரஞ்சித் ஷாவிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்த போது, ‘இந்த சிலைகள் அனைத்தையும் தான் திருடவில்லை. சிலைகள் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கப்பட்டவை. இதற்கான ரசீது மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன’ என்று ரஞ்சித் ஷா கூறியுள்ளார்.
இதன் பேரில், ரஞ்சித் ஷா கூறிய ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள். பின்னர் அவரது வீட்டிலிருந்து வெளியேறினர்.