

முதலீட்டாளர்களை மோசடி செய்த தனியார் நிதி நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போலீஸ் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வின்னர்ஸ் அக்ரி வேர்ல்ட் என்ற பெயரில் சிறு சேமிப்பு நிதி நிறுவனத்தை தொடங்கினார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர். இதன் மூலம் ரூ.2 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை பெற்றார். இந்த தொகையைக் கொண்டு செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 18 மாதங்கள் முடிந்த நிலையில் முதிர்வு தொகை யான ரூ.3.25 கோடி பணத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு ஸ்ரீதர் திடீரென தலைமறைவானார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நிதி நிறுவன மேலாண் இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் டீம் லீடர் குணசேகரனை கண்டுபிடித்து ரூ.1.25 கோடியை பெற்று தந்தனர். பாக்கி தொகையான ரூ.2.40 கோடியை, 3 தவணைகளில் வழங்குவதாக ஸ்ரீதர் உறுதி பத்திரம் அளித்தார். ஆனால், பணத்தை வழங்காமல் மீண்டும் தலைமறைவானார்.
இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யாத பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரை கண்டித்து, பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் கடந்த வாரம் எஸ்பி அலுவலக வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினர். இரு நாளில் நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பினர்.
இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நேற்று மேற்கண்ட அலுவலகத்தை முதலீட்டாளர்கள் மீண்டும் முற்றுகையிட்டனர். அப்போது, சுகலட்சுமி என்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் அனை வரும் கலைந்து சென்றனர்.