Published : 22 Mar 2017 03:14 PM
Last Updated : 22 Mar 2017 03:14 PM

அன்பாசிரியர் 34: காந்திமதி- பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்டியவர்!

சிறந்த ஆசிரியரின் தாக்கத்தை யாராலும் அழிக்க முடியாது; எவராலும் மாற்ற முடியாது.

தஞ்சாவூரில் மதுக்கூர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த பழைய பள்ளிக் கட்டிடத்தை அவர்களின் அனுமதியோடு இடித்து, மிகுந்த மன மற்றும் பொருளாதாரப் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக அரசுப் பள்ளியைக் கட்டி முடித்திருக்கிறார் ஆசிரியர் காந்திமதி. அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்....

''எல்ஐசியில் கிடைத்த வேலையை வேண்டாம் என்றுகூறி மனதுக்குப் பிடித்த ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். 1997-ல் மதுக்கூர் வடக்கில் இருந்த நடுநிலைப்பள்ளியில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் மாணவர்களைக் கையாள்வதில் சிரமப்பட்டேன். நாளாக நாளாக அவர்களுக்கு ஏற்றவாறு என் அணுகுமுறையை மாற்றிக்கொண்டேன்.

படங்கள் மூலம் எழுத்துப் பயிற்சி

ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உச்சரிப்புக்கும், எழுத்துக்களை கற்கவும் முக்கியத்துவம் அளித்தேன். இதன்மூலமே அவர்களின் வாசிப்பும், படிப்பும் மேம்படும் என்பதில் கவனமாக இருந்தேன். எழுத்தை நினைவில் வைக்க பட உத்தியைக் கையாண்டேன். பள்ளி ஆய்வுக்கு வந்த மாவட்டக் கல்வி அலுவலர் இதைப் பார்த்து என்னை, 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அறிவியல் பாடத்தை எடுக்கச் சொன்னார்.

இரு ஆண்டுகள் கழித்து மதுக்கூர் தெற்கில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக மாற்றலானது. 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கே கடினமான சூழலில் பாடம் கற்று வந்தனர். வகுப்பறை இடம் போதாமல், மாணவர்கள் நெருக்கடிக்கு ஆளாகினர். பள்ளி, ஓர் ஓட்டுக் கட்டிடத்தில் பள்ளிவாசலின் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்தது. அப்போது தலைமை ஆசிரியர் முன்னிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட முயற்சிக்கப்பட்டது. ஆனால் வாரியத்தினர் தயக்கம் காட்டியதாலும், பண வசதி இல்லாமலும் அம்முயற்சி கிடப்பில் போனது.

'அண்டமியில் இருந்து வந்த மாணவர்கள்'

2003-ல் அந்தமி என்னும் ஊருக்கு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. அங்கே பள்ளிக்காக மைதானம் கட்டினோம்; கட்டிடங்களைப் புதுப்பித்தோம். இட வசதி இருந்ததால் 4000 சதுர அடியில் தோட்டம் அமைத்தோம். அனைத்து வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. செயல்வழிக் கற்றல் அட்டைகள் வருவதற்கு முன்பாகவே எழுத்துக்களைக் கொண்டு ஆங்கிலத்தில் அட்டைகள் தயாரித்தோம்.

எழுத்தின் மூலம் வார்த்தையையும், வார்த்தைகளின் மூலம் வாக்கியத்தையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்பட்டபோது, தர்மலிங்க வேளாளர் என்பவர் அப்போதே 50 ஆயிரம் ரூபாயை அளித்தார். அதைக் கொண்டு பெற்றோர் கழகம் சார்பில் இரு ஆசிரியர்களைக் கூடுதலாக நியமித்தோம். மற்ற பள்ளிகளில் அண்டமியில் இருந்து வந்த மாணவர்கள் என்று சொல்லவேண்டும் எனக் கூறிக்கொண்டே உழைத்தோம்.

பெற்றோரின் உதவியோடு இரவு வகுப்பு

பெற்றோர்களின் ஒத்துழைப்போடு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இரவு 7- 8 மணி வரை தினமும்மாணவர்கள் படித்தனர். சில சமயங்களில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் 6.30 மணிக்கே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தனர்.

ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பெற்றோரைக் கண்காணிப்பாளராக நியமித்தோம். மதுக்கூரின் நான்கு தெருக்களுக்கும் 4 பேருக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டது. சிறப்பு வகுப்பில் படிக்காதவர்களின் பெற்றோர்களை அழைத்து கல்வியின் தேவையை உணர்த்தினோம். இப்போது எங்கள் ஊரில் ஏராளமான பொறியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், தொழில் பயிற்றுநர்கள் உருவாகி உள்ளதற்கு, இது அடிப்படையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

2008-ல் மீண்டும் மதுக்கூர் தெற்குக்கே மாற்றலானது. தலைமை ஆசிரியராக வந்ததால் நினைத்தச் செய்ய முடிகிற சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் பள்ளிக்கட்டிடம் மிக மோசமான நிலையில் இருந்தது மன உளைச்சலை ஏற்படுத்தியது. தரை, கூரை பெயர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கம்பிகள் உடைந்து கிட்டத்தட்ட இடிந்துவிழும் நிலையில் இருந்தது. மாணவர்களை வகுப்பறையில் அமரவைக்கவே பயமாக இருந்தது. அப்போதெல்லாம் எதுவும் செய்யமுடியவில்லையே தினமும் அழுதிருக்கிறேன்'' என்று சொல்லும்போதே குரல் உடைகிறது ஆசிரியர் காந்திமதிக்கு. தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்கிறார்.

நமக்கு நாமே திட்டம்

''வக்ஃப் வாரியத்துக்கு தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து வந்தேன். நேரில் போயும் பலமுறை வலியுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் தயக்கம் காட்டினர். சரி நிதியாவது திரட்டுவோம் என்று வீதி வீதியாக அலைந்தேன். அதைக் கண்ட முன்னாள் மாணவர்கள் சங்கம் வெளிநாட்டில் பணிபுரியும் சக மாணவ நண்பர்களிடம் இதைத் தெரிவித்தனர். இதயத்துல்லா என்ற முன்னாள் மாணவர், ''டீச்சர் உங்க பேருலையே ஒரு இடத்தை வாங்கி ஸ்கூல் கட்டுங்க; செலவையெல்லாம் நான் பார்த்துக்கறேன்'' என்றார். மகிழ்வாக இருந்தாலும், ஒருவரிடம் மட்டுமே வாங்குவது முறையல்ல எனத் தோன்றியது.

எனது முயற்சியைப் பார்த்த பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி வாசல் அன்பர்கள், முன்னாள் மாணவர்கள், உதவி தொடக்க அலுவலர் ரவிச்சந்திரன், பயிற்றுநர் விஜயகுமார் ஆகியோர் உதவினர். பள்ளியின் தேவை குறித்து தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

2012-ல் நமக்கு நாமே திட்டத்தை ஆரம்பித்தோம். அதன்கீழ் முன்னாள் மாணவர் சங்கத்தினர், முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் ஜாகீர் உசேன், முகமது அலி ஜின்னா, அப்துல் மாலிக், பஷீர் அகமது, முகைதீன் மரைக்காயர் ஆகியோர் உதவினர். அனைவரின் முயற்சியாலும் ரூ.13 லட்சம் திரட்டப்பட்டது.

பள்ளிவாசலில் பாடம்

கட்டிடம் கட்ட ஆரம்பித்தவுடன் பள்ளியின் தளவாடப் பொருட்களை ஏஈஓ அலுவலகம், கொடையாளிகளின் வீடுகள் என்று வைத்துப் பாதுகாத்தோம். முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க கட்டிடம், பள்ளிவாசலின் ஒரு பகுதியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. 2014-ல் பள்ளிக் கட்டிடம், முன்பு இருந்த அதே இடத்தில் 6 வகுப்பறைகள் மற்றும் மாடி பேரூராட்சி உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மேலாண்மைக் குழுவினர் முழு ஆதரவளித்தனர்.

பள்ளிக் கட்டிடம் முன்னர், பின்னர்

இப்போது குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க முடிகிறது. முகமது ஈசாக் என்பவர் தன் தந்தையின் நினைவாக ரூ.50 ஆயிரம் செலவில் கண்ணாடித் தடுப்புடன் கூடிய கணினி அறையை அமைத்துத் தந்தார். பேரூராட்சித் தலைவர் பஷீர் அகமது ரூ.30 ஆயிரம் செலவில் ஒருபக்கச் சுற்றுச்சுவர் அமைத்தார். பள்ளி ஆசிரியர்களும் முழு மனதோடு பள்ளிக்குப் பங்களிப்பு செய்கின்றனர். ரேகா என்னும் ஆசிரியர் பள்ளிக்கான வாயில் கதவை ரூ.10 ஆயிரம் செலவில் அமைத்துக்கொடுத்தார். கவின்ஜோதி என்னும் ஆசிரியர் ரூ.1,500 செலவில் வகுப்பறை நூலகம் அமைத்துள்ளார்.

சிரமத்துக்கு இடையிலும் மாணவர்களுக்கு சிறந்த மதிய உணவை அளிக்கிறோம். கராத்தே, அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல் மன்றங்கள், தையல் பயிற்சி, ஜேஆர்சி, பாலர் சபை ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. மாணவர்களுக்கு இரு கழிப்பறைகள் கட்டப்பட்டன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வகுப்புகளுக்கு ஃபேன், லைட் ஆகியவறை வாங்கிவிட்டோம். தொடக்கக் கல்வித்துறை கணிப்பொறி, மடிக்கணினி மற்றும் புரொஜெக்டரை வழங்கியுள்ளது.

வகுப்புகளுக்கு டைல்ஸ் ஒட்டவேண்டும். பள்ளியின் இடவசதி மிகவும் குறைவு என்பதால் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் வேண்டும். பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் குழந்தைகள் என்பதால், மாணவிகள் அனைவரையும் ஆட்டோ, வேனில் ஏற்றிய பிறகுதான் தினமும் கிளம்புவேன். 2022-ல் ஓய்வு பெற்றுக் கிளம்புவதற்கு முன்னால் பள்ளியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்'' என்கிறார் அன்பாசிரியர் காந்திமதி.

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 33: தனபால்- 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான்!

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@thehindutamil.co.in

ஆசிரியர் காந்திமதியின் தொடர்பு எண்: 9976406533


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x