குற்றால அருவிகளில் வெள்ளம்: 2-வது நாளாக குளிக்கத் தடை - குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

குற்றால அருவிகளில் வெள்ளம்: 2-வது நாளாக குளிக்கத் தடை - குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழை
Updated on
1 min read

குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பரவலாக சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையளவு அதிகரித்துள்ளதால், பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தலா 2 அடி வரை உயர்ந்தது.

குற்றாலத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்வதால் அருவிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மலையில் பெய்த பலத்த மழையால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்ததையடுத்து தடை விலக்கப்பட்டது. மாலையில் ஐந்தருவி, பிரதான அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால், இரு அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

குற்றாலம் மலைப் பகுதியில் நேற்றும் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அருவியின் அருகில் யாரும் செல்லாத வகையில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

புலியருவியில் தண்ணீருடன் மண் அதிகமாக கலந்து கொட்டியதால் அங்கும் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சிற்றருவி மற்றும் பழைய குற்றாலத்தில் தாராளமாக கொட்டிய தண்ணீரில் பலர் குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம் அகத்தியர் அருவிக்கும் ஏராளமானோர் சென்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக விடாது மழை கொட்டித் தீர்த்தது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in