

திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர் பான முறைகேடு புகார் குறித்து, விசாரிக்கும் கமிஷனுக்கு ஜனவரி 22 வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், சுமார் ரூ.1,000 கோடி செலவில், புதிய தலைமை செயலகக் கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம், 2010ம் ஆண்டு மார்ச்சில், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு சட்டசபை கூட்டத் தொடர்களும் நடத்தப்பட்டன. பின், 2011ல் அதிமுக ஆட்சி அமைந் ததும் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து சட்டசபை மீண்டும், ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் முறை கேடு நடந்துள்ளதாகவும், இந்த கட்டிடம் உறுதியாக இல்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக் கப்பட்டது.
நீதிபதி ரகுபதி கமிஷன், புதிய தலைமை செயலகம் குறித்து பல்வேறு கோணங்க ளில் விசாரணை நடத்தி வந்தது. இக்கட்டிடம் திமுக தலைவர் கருணாநிதி முதல்வ ராக இருந்த போது, கட்டப்பட்ட தால், அவரிடமும் நேரில் விசாரணை நடத்த கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கருணாநிதி சார்பில் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டு, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெறப்பட்டது.
3 மாதங்களுக்கு
இந்நிலையில், ரகுபதி கமிஷனின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முடிந்ததையொட்டி, கமிஷனின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து, தமிழக பொதுத் துறை (கட்டிடங்கள் பிரிவு) முதன்மை செயலர் ஜதீந்திர நாத் ஸ்வைன் பிறப்பித்த உத்தரவில், அக்டோபர் 22 முதல் மூன்று மாதங்களுக்கு கமிஷனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.