

கோவை குனியமுத்தூரில் லட்சிய திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க அக்கட்சித் தலைவரும், நடிகருமான விஜய டி.ராஜேந்தர் நேற்று கோவை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திரைப்படங் களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கும் விவகாரம் தொடர் பாக நடிகர் கமல்ஹாசனைத் தவிர மற்றவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை எனத் தெரிய வில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பிராந்திய மொழி படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து போராட உள்ளேன்.
சுவாதி கொலை வழக்கை திரைப்படமாக எடுத்த இயக்குநர் மீது சென்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக திரைத்துறையில் உள்ள ஜாம்பவான்கள் ஏன் வாய் திறக்கவில்லை.
அரசை இயக்குவது யார்?
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழகத்தின் முதல்வர் ஆக முடியாது என முதலில் சொன்னது நான் தான். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. எடப் பாடி பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே யாரோ செயல்படுகிறார்கள். அவர் களுடைய கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசு இயங்குகிறது. அதிமுக உடைந்தால் திமுக தலையெடுக்கும் என சிலர் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. திமுகவை யாரும் அழிக்கத் தேவையில்லை. ஸ்டாலின் ஒருவரே போதும்.
பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை ஒரே நாளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட முடியாது. அனைத்து உணவு பொருட்களிலும் பல நாட்களாக கலப்படம் நடந்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.
நடிகர் வடிவேல் பேச்சை நம்பத் தயாராக இருக்கும் மக்கள் கூட, மத்திய அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் குறித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சை நம்பத் தயாராக இல்லை என்று அவர் கூறினார்.