

சிறப்பு உதவியாளரை மீண்டும் நியமிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக் கில், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர் தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக எம்எல்ஏக்களை திமுக பெற்றதால், எதிர்கட்சித் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். எதிர்க்கட்சித் தலை வருக்கென தனிப்பட்ட உரிமைகள், அதிகாரங்கள் உள்ளன. கடந்த 1979-ம் ஆண்டு அரசு ஆணைப்படி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கென தனியாக சிறப்பு உதவியாளரை நியமித்துக் கொள்ள வழிவகை உள்ளது. அதன் அடிப்படையில் எனக்கு அரசு சார்பில் சிறப்பு உதவியாள ராக தலைமைச் செயலக பணியில் உள்ள எம்.ஆதிசேஷன் என்பவர் துணைச் செய லாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 17-ம் தேதி திமுக உறுப் பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டோம். அதன் தொடர்ச்சியாக 22-ம் தேதி திமுக சார்பில் சட்டப்பேரவை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினோம். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு என நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளரை அரசு திரும்பப் பெற்றதுடன், அவரை பதவியிறக்கமும் செய்துள்ளது. இது சட்டவிரோதமானது.அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலை வருக்கென உள்ள மதிப்பைக் குறைக் கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனவே, எனக்கு மீண்டும் அதே துணைச்செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு உதவியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இதுதொடர்பாக சட்டப் பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் மற்றும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.