

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை நேற்று 2-வது நாளாக ரிசர்வ் வங்கி மாற்றித் தர மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கி களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதன் பிறகு ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்காக நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கிக்கு வந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படவில்லை. இதை யடுத்து, அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தனர். நேற்றும் அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்பட வில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாங்கள் கடந்த 2 நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கிக்கு வருகிறோம். ஆனால், வங்கி அதிகாரிகள் அவற்றை மாற்றித் தர மறுக்கின்றனர். காரணம் கேட்டால் தங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து முறையான உத்தரவு வரவில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் நாங்கள் தினமும் வந்து ஏமாந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கி வாயிலில் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும், எந்த ஒரு அதிகாரியும் முறையாக பதில் சொல்வதில்லை. நாங்கள் உள்ளே சென்று கேட்கலாம் என்றால் எங்களை வங்கிக்கு உள்ளே விட அனுமதி மறுக்கின்ற னர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படு கிறது. அடுத்த வாரம் முதல் மற்றவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படும்’ என்று தெரிவித்தனர்.