3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: சென்னையில் அக்டோபர் 2-ல் தொடங்குகிறது - அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் தகவல்

3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: சென்னையில் அக்டோபர் 2-ல் தொடங்குகிறது - அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் தகவல்
Updated on
1 min read

3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கவுள்ளது என்று மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் கூறினார்.

3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. இதில் மாநாட்டின் அமைப்பாளரும் சென்னை மேம்பாட்டு சமுதாயத்தின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வி.ஆர்.எஸ்.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழர்கள் உலகெங்கும் உள்ளனர். தமிழர்களில் சிறந்த தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் என பலரும் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், மற்ற இனக் குழுக்களைப் போல் தமிழர்கள் வளர்ச்சியடைவில்லை. இதற்கு தொடர்பின்மைதான் காரணம். எனவே, உலகெங்கும் உள்ள தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைக்கும் வண்ணம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

இதையடுத்து 2-வது மாநாடு துபாயில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் வரும் அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அக்டோபர் 1-ம் தேதி பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து 500-க்கும் அதிக மான தமிழ் தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் பங்கேற்கவுள்ளனர். கயானா நாட்டின் பிரதமராக உள்ள தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வுள்ளார். மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க வுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் உள்ள தமிழ் அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டி அழைப்புவிடுக்கவுள்ளோம். இம்மாநாட்டில் உலகத் தமிழர் மாமணி என்னும் விருது வழங்கப்படவுள்ளது.

தொழில் துறையில் சாதித்தவர் கள் பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் பேசவுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் தொழில் துறையில் சிறந்து விளங்க வும், ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இம்மாநாடு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in