

போளூர் வட்டம் மண்டகொளத்தூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 சிறுவர்கள் மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மண்டகொளத்தூர் கிராமம் அண்ணா நகரில் வசிப்பவர் ஜெயபாலன் மகன் பரத் (10). ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். இவருடன் சேர்ந்து 5 சிறுவர்கள், டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிராக மனு கொடுக்க திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றனர். வந்தவாசியில் நடைபெறும் ஜமாபந்தியில் தி.மலை ஆட்சியர் பிரசாந்த் பங்கேற்றதால், சிறுவர்களால் மனு கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து, திருவண்ணா மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு சென்று, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுப்ரமணியனை சந்தித்து மனு கொடுத்தனர். சிறுவர்கள் அளித்துள்ள மனுவில், “மண்டகொளத்தூர் கிராமத்தில் வழிபாட்டுத் தலத்துக்கு அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அமைந் துள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபடு கின்றனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி செய்வதால் நிம்மதியாக நடந்து செல்ல முடியவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக அகற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நரசிங்கநல்லூரில் வேண்டாம்
இதேபோல், செங்கம் வட்டம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கக்கூடாது என்று வலி யுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில், கொண்டு வந்த மனுவை கிராம மக்கள் போட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “மேலபுஞ்சை கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை எங்கள் கிராமத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் மதுபானக் கடை கொண்டு வந்தால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பெண்களின் நிம்மதி பறிபோகும். அதனால், மதுபானக் கடையைத் திறக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிடவேண்டும்” என்றனர்.