Published : 20 Jan 2016 11:39 AM
Last Updated : 20 Jan 2016 11:39 AM

அலங்காநல்லூர் அருகே பெட்ரோல் குண்டு கண்டெடுப்பு: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

அலங்காநல்லூர் அருகே பெட்ரோல் குண்டு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம், கடையடைப்பு, கருப்பு கொடி கட்டுதல், ஊர்வலம் என கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அலங்காநல்லூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்குப் பின் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நேற்று முன்தினம் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், அலங்காநல்லூர் அருகே உள்ள ஊர்சேரி கிராமம் அருகே சாலையோரத்தில் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் கிடந்தது.

இதுகுறித்த தகவல் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x