

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பாக சிறைத்துறை, காவல்துறை, குற்றவாளிகளின் கூட்டணியை விசாரிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்று சிறை அதிகாரிகள் கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே, ராம்குமாரின் மரணம் குறித்து தற்போது பணியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
சிறைச்சாலையில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். தண்டனைக் கைதியோ விசாரணைக் கைதியோ உயிர் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையைப் பாதுகாக்கவேண்டியது சிறை அதிகாரிகளின் பொறுப்பு என்று நீலாவதி பெஹரா, ஒரிசா மாநில அரசு ( 1993) இடையேயான வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புழல் சிறை அதிகாரிகள் மதிக்கவில்லை, தமிழக அரசாங்கமும் சிறையில் இருப்போரின் நலன் குறித்து கவலைப்படவில்லை. அதைத்தான் ராம்குமாரின் மர்ம மரணம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
தமிழகத்தில் 2000 ஆண்டு முதல் 2013 வரை 1,155 பேர் சிறையில் மரணம் அடைந்துள்ளதாக தமிழக சிறைத்துறையே நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதன்படி, நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழக சிறைகளில் மரணம் அடைகின்றனர்.
சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருகிவரும் குற்றங்களுக்கு காவல்துறை, சிறைத் துறை,கிரிமினல்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே எற்பட்டுள்ள கூட்டணியே முதன்மையான காரணமாகும். அண்மையில் சிறைக்குள் பேரறிவாளன் தாக்கப்பட்டிருப்பது இதற்கொரு சான்று.
ராம்குமார் மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக் குழு காவல்துறை, சிறைத் துறை, கிரிமினல்களின் கூட்டணி குறித்தும் விசாரிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.