

எழும்பூரில் டாக்டர் எம்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார்.
சென்னை எழும்பூர் பி.வி.செரியன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் எம்மா(80) என்பவர் தனியாக வசித்து வந்தார். அவருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. தனது வீட்டுக்குள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மர்மமான முறையில் டாக்டர் எம்மா இறந்துகிடந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், எம்மாவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் கையில் லேப்டாப் மற்றும் பையுடன் வெளியில் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றி அந்த இளைஞரை தேடிவந்த நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
ஆனால், இந்த கொலை சம்பவத்தில் எம்மாவின் சகோதரி மகனான இம்மானுவேல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தனது காலத்துக்கு பிறகு இந்த சொத்துகள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என தனது உறவினர்களுக்கு தெரியாமல் எம்மா உயில் எழுதி வைத்திருந்தார்.
ஆனால், இது தெரியாமல் எம்மாவின் சொத்துகளுக்காக இம்மானுவேல் போலி உயில் தயாரித்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இம்மானுவேல்தான் எம்மாவை கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் எம்மா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் கொலை வழக்கு விசாரணை மீண்டும் முதலில் இருந்து நடந்தது. கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். கேமராவில் சிக்கியிருந்த கொலையாளியின் உருவத்தை வைத்து அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் மாலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவர் அடைக்கப்பட்டார். டாக்டர் எம்மாவின் வீட்டுக்கு லேப்டாப் சரிசெய்ய வந்த இந்த சிறுவன் அவரை கொலை செய்து லேப்டாப் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. கேமராவில் பதிவாகியிருக்கும் உருவமும் இவருடையதுதான் என்று கூறப்படுகிறது.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிறுவனை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் எம்மா கொலை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கொலை தொடர்பாக சிறுவனின் சகோதரர் ஒருவரும் சிபிசிஐடி போலீஸிடம் சிக்கி இருக்கிறார். அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.