Published : 05 Oct 2014 10:40 AM
Last Updated : 05 Oct 2014 10:40 AM
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ‘தி இந்து’ வாசகிகளுக்கான நவராத்திரி சுண்டல் போட்டி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இதில் பங்கேற்க முன்வந்தனர். முதல்கட்டத் தேர்வின் முடிவில் 47 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கெஸ்டோ சமையல் கல்வி மையத்தில் நேற்று நேரடி போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற வாசகிகள் விதவிதமாக, ருசியான சுண்டல்களைத் தயாரித்து, அலங்கரித்து அசத்தினர்.
‘யம்மி டம்மி’ சுண்டல், ஃபைபர் சுண்டல், நவ நட்சத்திர காய்கறி பிரெட் சுண்டல், சுண்டல் சாட், ராஜ்மா இனிப்பு சுண்டல் என வகை வகையான சுண்டல்கள் சுடச்சுட சமைத்து வைக்கப்பட்டன. போட்டியின் நடுவர்களாக சமையல் கலை நிபுணர்கள் மல்லிகா பத்ரிநாத், கீதா பாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். வாசகிகளுடன் கலந்துரையாடி, சுண்டல்களைச் சுவைத்துப் பார்த்து, தீர்ப்பு வழங்கி, வெற்றியாளர்களுக்குப் பரிசளித்தனர்.
‘தி இந்து’வுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்திய எஸ்.எம்.சில்க்ஸ், போட்டிக்கான பரிசுகளை வழங்கியது. ‘தி இந்து’ நாளிதழின் வர்த்தகத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனத் தலைவர் மனோகர், கெஸ்டோ ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குமார் ஏகாம்பரம் ஆகியோர் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினர்.
இந்த சுவாரசியமான நிகழ்ச்சியை ஃபுரூட் நிக், அத்வைதா அமேசிங் சாம்பிராணி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், சாக்ஷி வெல்னஸ், ஸ்பிரிங் மெட் ஸ்பா, ஆல்ஃபா மைண்ட் பவர், நவ்யா மற்றும் கிராஸ் ஹாப்பர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கின.