

தமிழப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்: இலக்குகளை நோக்கி முன்னேற தமிழ்ப் புத்தாண்டு நல்ல தொடக்கமாக தமிழக மக்களுக்கு அமையட்டும். பாரம்பரியம் கலாசாரத்தை ஒற்றுமையுடன் இணைந்து வளமான இந்தியாவை உருவாக்குவோம். தமிழக மக்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர்: இந்த இனிய நாளில் மக்கள் அனைவரின் துன்பங்கள் அகன்று, சகோதரத்துவம் ஓங்கி, வறுமை அகன்று, மத நல்லிணக்கம் தழைத்தோங்கிடவும், விவசாயிகள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, வளமும் பெருகி இன்பமுற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழ்நாடு இன்று பல்வேறு இடர்ப்பாடுகளில் தவிக்கிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால், இந்த ஆண்டும் எங்கும் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள் அசலும், வட்டியும் கட்டமுடியாமல் தினறிவருகின்றனர். அதனால் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கோரிக்கை வைத்து நீண்ட நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலோர மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொள்வதும் தொடர்ந்து நடந்த வண்ணமாக இருக்கிறது. ஒரு புறம் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டிலாவது தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், பிடித்துள்ள கஷ்டங்கள் யாவும் நீங்கி, அவர்கள் நிம்மதியாக வாழ வழிபிறக்கும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் எங்கும் ஊழல், எதிலும் என்பது நீங்கி, இந்த தமிழ் புத்தாண்டிலாவது ஊழல் இல்லாத தமிழகமாக மாற வேண்டும். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு இணங்க, உலகமெங்கும் தலைகுனிந்து நிற்கும் தமிழர்கள், இந்த ஆண்டிலாவது தலைநிமிர்ந்து நிற்க வழி பிறக்கட்டும். இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரும் அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும், வளமும், வாழ்வும் பெற தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்: தமிழ் மக்கள் வாழ்வில் கடந்த காலங்களில் நிகழ்ந்த துயரங்கள் , இன்னல்கள், துன்பங்கள் நீங்கி இனி வரும் காலம் வசந்த காலமாக அமைய வாழ்த்துகள்.