இந்த முறை கோவை தொகுதி யாருக்கு கிடைக்கும்?- பாஜகவில் நடக்கும் பவர் பாலிடிக்ஸ்
கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக-வுக்கு நம்பிக்கை தரும் தொகுதி கோவை. இப்போது இங்கே களமிறங்க பாஜக-வில் ஜி.கே.செல்வகுமாரும் முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணனும் பலம் திரட்டுகிறார்கள்.
1996-ல் தனித்துப் போட்டியிட்டே கோவை தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றது பாஜக. 1998-ல் அதிமுக-வுடன் கைகோத்து களமிறங்கியபோது சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் கோவைக்கு எம்.பி. ஆனார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து அடுத்து வந்த தேர்தலில் திமுக-வுடன் கைகோத்து சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் எம்.பி. ஆனார் ராதாகிருஷ்ணன்.
அதைத்தொடர்ந்து சி.பி.ஆரின் வளர்ச்சி கட்சியில் மாநிலத் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தது. ஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியோடு மீண்டும் களத்துக்கு வந்த சி.பி.ஆர் தோற்றுப் போனார். அத்துடன் அவரது அரசியல் வாழ்க்கையும் பிரகாசமிழந்து போனது. இவருக்கு எதிராக கிளம்பிய இல.கணேசன் கோஷ்டியினர் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினர்.
கடைசியில் அவர்கள் கையும் வீழ்ந்து மாநில செயலாளர் ஜி.கே.செல்வகுமார் கை ஓங்க ஆரம்பித்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சி.பி.ஆரை ஓரங்கட்டிவிட்டு ஜி.கே.செல்வகுமாருக்கு சீட் கொடுத்தது தலைமை. களத்துக்கு புதியவரான செல்வக்குமார் அந்தத் தேர்தலில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆனாலும், இந்த முறையும் கோவைக்கு நாங்கள்தான் என மார்தட்டுகிறது செல்வகுமார் கோஷ்டி. திடீர் கூட்டணி மாற்றங்கள் ஏற்பட்டால் இந்த இருவருமே இல்லாத புதிய நபர்கள் கோதாவில் குதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறது இல.கணேசன் கோஷ்டி. அப்படி இல்லாதபட்சத்தில் சி.பி.ஆருக்கும் ஜி.கே.செல்வ குமாருக்கும் இடையில் கோவை தொகுதியில் போட்டியிட கடுமையான போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
