Published : 24 Apr 2017 11:50 AM
Last Updated : 24 Apr 2017 11:50 AM

மதுரையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

மதுரையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், பயணிகள் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது.

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கோடை மழை பெய்தால்தான் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நேற்று பெய்த கோடை மழை மகிழ்ச்சியை அளித்தது.

மரங்கள் சாய்ந்தன

அதே சமயம், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், உச்சப்பரம்பு மேடு, கூடல்நகர் சோதனைச்சாவடி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பகுதி, கூடல்புதூர், தென்பரங்குன்றம், திருநகர் சுந்தர் நகர் ஆகிய இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்நிலையம், ஆரப்பாளையம் பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. காளவாசல், ஆரப்பாளையம் உட்பட சில இடங்களில் சூறைக்காற்று வீசியதால் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழுந்தன. சூறைக்காற்றுக்கு செல்லூரை சேர்ந்த ஒருவரின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடு சேதமடைந்தது.

ரயில் சேவை பாதிப்பு

திருப்பரங்குன்றம் பகுதியில் வெயில் உகந்தம்மன் கோயில் அருகே தண்டவாளத்தின் குறுக்கே பெரிய மரம் ஒன்று விழுந்தது. இதன் காரணமாக திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் திருப்பரங்குன்றம் அருகே மாலை 5.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. மரத்தை ரயில்வே ஊழியர்கள் அகற்றிய பின், இரவு 8.30 மணியளவில் அவ்வழியாக ரயில் இயக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x