

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக தேவநாகரி எண் வடிவம் இடம் பெற்றிருப்பதால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளை மதிப்பிழக்க செய்யக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு புழக்கத்தில் விட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளில், அரசியல் சட்டம் அனுமதிக்காத தேவநாகரி மொழி வடிவத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்யக் கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அக்ரி கணேசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் எண்களை பொருத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய எண் வடிவங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு எண் வடிவங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யப்படாமல் 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி மொழியின் எண் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, புதிய ரூபாய் நோட்டுகள் தொடர்புடைய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.
இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.