

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தமிழக அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த 61 தமிழக அரசுப் பேருந்துகள் உப்பளம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக பேருந்துகள் இயங்காததால் பயணிகளின் சிரமத்தை போக்க கூடுதலாக 15 புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. முன்னதாக அண்ணா தொழிற்சங்கத்தை தவிர, மற்ற போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பளம் பணிமனை முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்னி பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு:
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னைக்கு ரூ.120 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.