

புதிய தலைமைச் செயலகக் கட்டிட பணிகள் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆர்.ரகுபதி விசாரணை ஆணையம் முன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த கட்டிடம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக நீதிபதி
ஆர்.ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘நீதிபதி ரகுபதி ஆணையம் முன் நான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணான வகையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, நான் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட சம்மனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இதேபோல் தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் இருவரும், நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையம் முன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.