

காங்கிரஸ் கட்சியில் இருந்து தம்மை நீக்குவதற்கு மாநிலத் தலைவராகவுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: செய்யார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட என்னை மாநிலத் தலைவராகவுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பி ஃபார்ம் கொடுத்ததில் ஆரம்பித்து, கொடி, பதாகை, ஸ்டிக்கர் போன்றவற்றை வழங்குவதிலும் குளறுபடி நடந்தது. இதனை நான் சுட்டிக்காட்டியதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவின் உறுப்பினராகவும் உள்ள என்னை, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்னை நீக்குவதற்கு இளங்கோவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வழியில் தான் நான் நடக்கிறேன் என்று அந்த அறிக்கையில் விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார்.