

மணல் தட்டுப்பாட்டைப் போக்க திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக 12 மணல் குவாரிகளை அரசு திறக்கிறது. விரைவில் அங்கு ஆற்று மணல் விற்பனை தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் சமீபகாலமாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மணல் விலையை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதித்துள்ளதாகவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே கள்ள பிரான்புரத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மணல் கிடங்குகளை அரசு கைப்பற்றியது. அங்கிருந்த 59 ஆயிரம் லோடு மணலை கடந்த 10-ம் தேதி முதல் விற்பனை செய்து வருகிறது. இருந்தபோதிலும் மணல் தட்டுப்பாடு நீங்கியபாடில்லை.
புதிதாக 12 குவாரிகள்
இந்நிலையில், தட்டுப்பாட்டை போக்க புதிய ஆற்று மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக 12 மணல் குவாரிகளை அரசு விரைவில் திறக்க உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மண்டலத்தில் தற்போது உள்ள 4 குவாரிகளால் மணல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, மணல் தட்டுப்பாட்டைப் போக்க திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 12 மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
ஒரு லோடு ரூ.840
இந்தப் புதிய குவாரிகள் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய தாலுகாக்களில் தென்பெண்ணை ஆறு மற்றும் கொசஸ் தலை ஆற்றில் செயல்பட உள்ளன.மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் (எஸ்.இ.ஐ.ஏ.ஏ.) அனுமதி கிடைத்ததும் புதிய குவாரிகளில் மணல் விற்பனை தொடங்கும்.
இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளபிரான்புரம், பழையசீவரம் ஆகிய இடங்களில் 50 ஆயிரம் லோடு மணல் இருப்பு உள்ளது. இந்த மணல் அடுத்த 2 மாதங்கள் வரை விற்பனை செய்யப்படும். இங்கு ஒரு லாரி லோடு (2 யூனிட்) மணல் ரூ.630-க்கு விற்கப்படுகிறது. ஆனால், புதிய மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் ரூ.840-க்கு விற்கப்படும் என்றார்.