தந்தையின் கனவை நிறைவேற்றவே கலந்தாய்வுக்கு சென்றேன்: விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் மகன் கண்ணீர் பேட்டி

தந்தையின் கனவை நிறைவேற்றவே கலந்தாய்வுக்கு சென்றேன்: விபத்தில் இறந்த தலைமைக் காவலரின் மகன் கண்ணீர் பேட்டி
Updated on
2 min read

தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காகவே பொறியியல் மாணவராக தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தேன் என்று, விபத்தில் இறந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தலைமைக் காவலரின் மகன் பிரதியுனன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் அருகேயுள்ள வத்தனாக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரவீந்திரன்(46). சிவகங்கையில் சிவில் சப்ளை காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணி புரிந்தார். இவரது மகன் பிரதியுனனுக்கு பொறியியல் கலந்தாய்வுக்காக காரில் ரவீந்திரன், பிரதியுனன், உறவினர்கள் பாக்கியராஜ், அனிஸ் ஆகியோர் கடந்த 13-ம் தேதி இரவு சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர். காரை பாக்கியராஜ் ஓட்டியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது லாரியும், இவர்களது காரும் மோதிக்கொண்டதில் அந்த இடத்திலேயே ரவீந்திரன் இறந்தார். மற்றவர்கள் உயிர் தப்பினர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு .கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், தனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மனஉறுதியோடு உறவினர்கள் யாருமின்றி அங்கிருந்து இரு போலீஸார் உதவியுடன் சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் கலந்தாய்வில் கலந்துகொண்டார் பிரதியுனன்.

அதில், காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிஇ சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளார்.

பின்னர், சென்னையில் இருந்து புறப்பட்டு வத்தனாக்குறிச்சிக்கு வந்து தந்தையின் உடலுக்கு,பொறியியல் மாணவராக இறுதிச் சடங்கு செய்துள்ளார்.

இதுகுறித்து உறவினர் பாக்கியராஜ் கூறியபோது, “பிரதியுனனை பொறியாளராக்க வேண்டும். சென்னை அல்லது கோவை பகுதியில் உள்ள சிறந்த கல்லூரியில்தான் சேர்க்க வேண்டுமென அவரது தந்தை கூறிவந்தார். சிலம்பபோட்டியில் மாநில அளவிலான சான்றிதழ்கள் பிரதியுனன் பெற்றிருந்ததால், ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற விளையாட்டு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் ரயில் மூலம் பிரதியுனனை அழைத்துச் சென்றிருந்தேன். எனினும், விண்ணப்பித்திருந்ததில் குறைபாடு இருந்ததால் அப்போது சீட் கிடைக்கவில்லை. அப்போதே கிடைத்திருந்தால் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.

விபத்து குறித்த தகவலையறிந்து, ஊரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வந்திருந்த ரவீந்திரனின் மனைவி ரேணுகாதேவியிடம் விபத்தில் அவர் இறக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார் என்றுதான் பிரதியுனன் கலந்தாய்வுக்கு கிளம்பும்வரை தெரிவித்திருந்தோம்” என்றார்.

வீரப்பனை தேடும் படையில்…

இதுகுறித்து ரேணுகாதேவி கூறியபோது, “என் கணவர் 25 வயதில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர், சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடும் படையில் சத்தியமங்கலம் காட்டில் பணிபுரிந்தார். பின்னர்தான் புதுக்கோட்டையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை பணி புரிந்தார். அதற்குப் பிறகுதான் சிவகங்கைக்கு பணிக்கு சென்றார். அவரது, ஊதியத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்திவந்தோம். பிரதியுனன் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளதால் அவரது படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், நான் 9-ம் வகுப்பு வரையே படித்துள்ளதால் இந்தக் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்ட ஏதாவது ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும். இதை அரசு செய்தால் மகன்கள் பிரதியுனன், ஜனார்த்தனன்(13), பிரியதர்ஷினி (16) ஆகியோரைப் படிக்க வைக்க முடியும்” என்றார்.

கனவை நிறைவேற்றுவேன்…

பிரதியுனன் கூறியபோது, “எங்களைப் படிக்க வைத்து, இந்த சமுதாயத்தில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என தந்தை எண்ணிக்கொண்டிருந்தார். அது முழுமையாக நிறைவேறவில்லை. தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்யும்போது, நான் ஒரு பொறியியல் மாணவர் என்ற அடையாளத்தோடு செய்ய வேண்டுமென்ற மன உறுதியோடுதான் கலந்தாய்வுக்குப் புறப்பட்டேன். கலந்தாய்வை முடித்துவிட்டு ஊருக்கு வந்து தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்” என்றார்.

மின்னல் வேகத்தில் ஒதுக்கீட்டு ஆணை

சாலை விபத்தில் தந்தையைப் பறிகொடுத்த மாணவர் பிரதியுனனுக்கு கலந்தாய்வின் போது சலுகைக் காட்ட முடியாத நிலையில், அவருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை மின்னல் வேகத்தில் வழங்கியது அண்ணா பல்கலைக்கழகம். மாணவர் பிரதியுனன் நேற்றுமுன்தினம் கவுன்சிலிங்குக்காக காஞ்சிபுரம் எஸ்.ஐ., ராஜி உதவியுடன் மதியம் 1.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

பகல் 2 மணிக்கு அவருக்கு கலந்தாய்வு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சாலை விபத்தில் மரணம் அடைந்த தனது தந்தையின் இறுதிச் சடங்குக்காக விரைவாக ஊர் செல்ல வேண்டும் என்று கலந்தாய்வு அதிகாரிகளிடம் பிரதியுனன் முன்கூட்டியே தகவல் தெரிவித்தார்.

பொறியியல் கலந்தாய்வு பொறுத்தவரையில் மாணவர்கள் தரவரிசைப்படிதான் அழைக்கப்படுவார்கள்.

அந்த வகையில் மாணவர் பிரதியுனன் அவரது தர வரிசைக்கேற்ப அழைக்கப்பட்டார். துயரமான ஒரு சூழலில் கலந்தாய்வின்போது அவருக்கு சிறப்பு சலுகை காட்ட முடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் இருந்தனர்.

எனினும், கலந்தாய்வின்போது அவர் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்ததும் ஒதுக்கீட்டு ஆணையை எவ்வளவு சீக்கிரம் வழங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழங்க அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, மாணவர் பிரதியுனன் தனக்குப் பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்ததும் அவருக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி அவரை அனுப்பி வைத்ததாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜே. இந்துமதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in