

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அதன் விலை கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய அளவில் மொத்த காய்கறி உற்பத்தியில் 8.23 சதவீதத்துடன் தக்காளி முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வேலூர், சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. அவை தமிழக தேவைக்கு போதுமானதாக இல்லை. அதனால் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
கோயம்பேடு சந்தையில் கடந்த ஆண்டு கடைசி 6 மாதத்தில் தக்காளி விலை ரூ.10-க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஜனவரியில் விலை ஏறத் தொடங்கியது. கடந்த பிப்ரவரியில் ரூ.40 வரை உயர்ந்தது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் தக்காளி விலை கிலோ ரூ.16 ஆக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரலில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, ஆண்டின் தொடக்கத்தில் தக்காளி விலை உயர்ந்தது. இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டது. தற்போது அதன் அறுவடை காலம் என்பதால், வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடந்த மாதம் வரத்து 50 லோடாக இருந்தது, நேற்றைய நிலவரப்படி 70 லோடாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி ரூ.7 முதல் ரூ.10 வரை தரத்துக்கு ஏற்றார்போல் விற்கப்படுகிறது என்றார்.
கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி, கேரட் கிலோ ரூ.60 ஆகவும், பீன்ஸ் ரூ.65 ஆகவும், கத்தரிக்காய் ரூ.35 ஆகவும், முள்ளங்கி, முருங்கைக்காய் ஆகியவை ரூ.25 ஆகவும் உயர்ந்திருந்தது. இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.சுகுமாரிடம் கேட்டபோது, தக்காளி, உருளை, வெங்காயம் ஆகிய காய்கறிகள் தான் கிலோ ரூ.15-க்கு கீழ் விற்கப்படுகின்றன. மற்ற காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளன. மே மாதத்தில் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.