

அதிமுக (அம்மா) கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதை தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் வேடிக்கை பார்ப்ப தாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள் ளார்.
ஆர்.கே.நகரில் நேற்று அதிகாலை அதிமுக (அம்மா) கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகக் கூறி திமுகவினர் அங்கு திரண்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த திமுக தொண்டர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவினர் பணம் கொடுக்க முயன்றதை தடுக்க முயன்ற திமுகவினர் வெட்டப்பட்டுள்ளனர். அதில் பார்த்தசாரதி, அப்பாஸ், குலசேகரன் ஆகியோருக்கு தலையில் வெட்டு விழுந்துள்ளது. ஒருவருக்கு 12 தையல்களும் மற்றொருவருக்கு 16 தையல்களும் போடப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்கள்.
சசிகலா தலைமையிலான அதிமுக அணியினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.4 ஆயிரம் கொடுக்கும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் 6 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் எக்ஸ் 6 காவல் நிலையத்தில் மட்டும் திமுக சார்பில் 28 புகார்கள் கொடுக் கப்பட்டுள்ளன. அஜீஸ் நகரில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுகவினர் பணம் கொடுக்க முயன்றபோது அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். ஆனால், நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
பணம் கொடுப்பவர்களை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தால், காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்று பிறகு விட்டு விடுகிறார்கள். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் முறையாக நடத்த விரும்புகிறது. சில அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதை நான் வரவேற்றேன். ஆனால், தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்னதான் பணப் பட்டுவாடா செய்தாலும் அதிமுகவின் இரு அணிகளும் டெபாசிட் இழப்பது உறுதி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது.
அதிகாரிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். தேர்தலை நடத்துகிறார்களா, ரத்து செய்கிறார்களா என்பது எங்கள் பிரச்சினை அல்ல. ஜனநாயகப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. பணம் கொடுத்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.