

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப்பட்டுள் ளார். புதிய அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக முதல்வரின் பரிந்துரைப் படி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சர வையில் இருந்து விடுவிக்கப்படு கிறார். புதிய அமைச்சராக ஆவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாண்டியராஜன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்படுகிறது.
ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இனி பால்வளத்துறையை கவனிப் பார். பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறையை கவனித்து வந்த பி.பெஞ்சமின், ஊரகத் தொழில் துறை அமைச்சராக செயல்படுவார். முதல்வரின் பரிந் துரையை ஏற்று இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அமைச்சரின் பதவியேற்பு விழா 30-ம் தேதி (இன்று) மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும்.
முதல் நீக்கம்
கடந்த மே 16-ம் தேதி நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. மே 23-ம் தேதி 6-வது முறையாக முதல்வராக ஜெயல லிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அன்றைய தினமே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சேவூர் ராமச்சந்திரன் (இந்து சமய அறநிலையத் துறை), கி.பாஸ்கரன் (காதி, கிராமத் தொழில்கள்), நிலோபர் கபில் (தொழிலாளர் நலம்), பி.பாலகிருஷ்ணா ரெட்டி (கால்நடை பராமரிப்புத் துறை) ஆகியோர் மே 25-ம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
அதன் பிறகு முதல்முறையாக தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப் பட்டு, புதிய அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் சேர்க்கப் பட்டுள்ளார். 2 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்து வந்த பாதை
பாஜக மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய .பாண்டியராஜன், பின்னர் தேமுதிக வில் இணைந்து 2009 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011 பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். பின்னர், சில ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், பேரவையில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்த அவர், ஆவடி தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.