

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய வெப்பநிலையை விட குறைவாகவே பல்வேறு நகரங்களில் நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் பகுதிகளின் பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதி கரிக்க வாய்ப்பில்லை. அந்த நாட்களில் வெப்பம் இயல்பை ஒட்டியே இருக்கும்.
நேற்றைய நிலவரப்படி, கரூர் பரமத்தியில் 107.6, வேலூரில் 106.16, திருத்தணியில் 105.8, திருச்சியில் 105.44, சேலத்தில் 103.64, மதுரையில் 102.92, தருமபுரியில் 102.56, கோவையில் 100.58, சென்னையில் 99.68, பாளையங்கோட்டையில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 9 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் நிலவிய வெப்பம், நேற்று 8 நகரங்களில் மட்டுமே 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.