

பேச்சுவார்த்தைக்கு சமூகமான சூழல் ஏற்படும்போது, நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் அணி தரப்பிலிருந்து அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் நேற்று ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று(புதன்கிழமை) முறையான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ''எங்களின் கோரிக்கைகளை ஏற்று, சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு அவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் சின்னச் சின்ன பிரச்சினைகள், வருத்தங்கள் இருக்கும். கருத்து வேறுபாடுகளை முதலில் அகற்ற வேண்டும். அப்படிச் செய்தால் பிரிவு ஏற்படாது.
சமுகமான சூழல் ஏற்படும்போது, நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை நிச்சயம் மாறாது.
கட்சியை கைப்பற்றும் நோக்கில் தினகரன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறார்? முன்னதாக எம்ஜிஆர் இறந்தபோதும் இதே அசாதாரண சூழல்தால் நிலவியது. ஆனால் அப்போதெல்லாம் இத்தகைய செயல்கள் நடைபெறவில்லை. இன்றைய நிலைமை அப்படி இல்லை. கட்சியைக் கைப்பற்ற தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்க முயற்சி செய்திருக்கிறார் தினகரன்.
சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. நிச்சயம் தர்மம் வெல்லும்''.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாகியிருக்கிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அமாவாசை என்பதால் இரு அணிகள் இணைப்பு பேச்சுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் கே.பி.முனுசாமி மீண்டும் சுமூகமான சூழல் ஏற்பட்டால் பேச்சுவார்த்தை எனக் கூறியிருக்கிறார்.