Published : 07 Dec 2013 11:50 AM
Last Updated : 07 Dec 2013 11:50 AM

ஏற்காடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: வைகோ

ஏற்காடு இடைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு ஊழல் கொள்ளைப் பணம் அள்ளிக் கொடுக்கப்பட்டதால்,தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வைகோ இன்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில்: ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிசம்பர் 04 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும், நவம்பர் 09 ஆம் தேதி அன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் இந்தியா பெருமையோடும், கண்ணியத்தோடும் தலைநிமிர்ந்து ஜனநாயக ஒளியைத் தரும் நாடாகத் திகழ்கிறது. அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளையும் நசுக்க முற்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் உள்ளிட்ட சவால்களையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தை இந்தியா பாதுகாத்த புகழுக்குரிய சாதனைக்கான காரணங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்திய பாங்கு முக்கியமான காரணமாகும்.

ஏனெனில், ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு நேர்மையான சுதந்திரமான தேர்தல்கள்தான் அடிப்படையாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பண பலமும், அடியாள் பலமும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவிடாமல், பாழ்படுத்துகின்றன. ஊழல் பணம் கொண்டு வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதும், அதனால் வெற்றிபெற்று அரசியல் அதிகாரத்துக்கு வருவதும், அதே அதிகாரத்தைக் கொண்டு ஊழலில் மேலும் பணம் குவிப்பதும், இந்திய அரசியலை நாசப்படுத்தும் நச்சுச் சுழலாக மாறி, இந்திய ஜனநாயகத்தின் உயிர் தன்மைக்கே கொடிய அச்சுறுத்தலாகிவிட்டது.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தேர்தல்களில் குறிப்பாக இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஊழலில் திரட்டப்பட்ட பணத்தைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளை, விதிகளை அப்பட்டமாக மீறுகின்ற அநீதியாகும்.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் வாக்காளர்களுக்கு பெருமளவு பணத்தைக் கொடுத்து அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில், தற்போதைய ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க. அதே மோசமான காட்சியை அரங்கேற்றியது. ஆளும் கட்சியினர், வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விநியோகித்தபோது, கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டும் கூட, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கும் மேலாக பல இடங்களில் காவல்துறையினரின் முழு ஒத்துழைப்போடு வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணத்தை வாரி இரைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, மறுக்க முடியாத சாட்சியங்களோடு இதுகுறித்து விளக்கமான புகார் கொடுத்தேன். ஆனால், தொடக்கத்தில் இருந்தே ஆளும் அண்ணா தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரித்து செயல்பட்டுவந்த அந்தத் தேர்தல் ஆணைய அதிகாரி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படவே இல்லை என்று ஒரே அடியாக மறுத்து அப்பட்டமான பொய்யைச் சொன்னார்.

தற்போது டிசம்பர் 04 ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தொகுதி முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு 2,500 ரூபாய் ஆளும் அண்ணா தி.மு.க. கொடுத்தது. தி.மு.கழகம் தன் பங்குக்கு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுத்தது. இந்த உண்மையை தொகுதில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக அறிவார்கள். இதனால்தான் 90 சதவீத வாக்கு பாதிவானது. அதுவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சரியான சாட்சியமாகும்.

சமுதாயத்தின் பல துறைகளில், முக்கியமாக அரசியலில் ஊழல் ஒரு புற்று நோயைப்போல ஊடுருவி விட்டது. தேர்தல்களில் ஊழல் என்கின்ற இந்த ஆபத்தான தீமையை அழிக்காவிட்டால், பொதுமக்கள் குறிப்பாக, இளம் தலைமுறையினர் ஜனநாயகத்திலும், தேர்தல் முறையிலும் அடியோடு நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

ஜனநாயகத்தின் பாதுகாவலனாகத் திகழும் இந்தியத் தேர்தல் ஆணையம், நமக்குச் சவாலாக விளங்கும் இந்தக் கேடான தீமையை அகற்றுவதற்கு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தலை பாராட்டுக்குரிய விதத்தில் தேர்தல் ஆணையம் நடத்தியிருக்கிறது.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை 08 ஆம் தேதி அன்று நடத்தாமல், நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு, தேர்தல் ஆணையம் தானே தீர்மானிக்கும் கால இடைவெளிக்குப் பிறகு இடைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழக மக்கள் மனதில் தேர்தல் ஆணையம் குறித்த நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் நிலை நாட்ட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x