

மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல், 500 சென்னை பேருந்து நிறுத்தங்களில், பஸ் வரும் தகவலைத் தெரிவிக்கும் வகையில் ஜிபிஎஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் பன்முறை போக்குவரத்து அமைப்பு (மல்டிமோடல் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்) நிறுவப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மோனோ ரயில் திட்டம், செயல்படுத்தத்தக்க முறையில் திருத்தி அமைக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-2015ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் இத்திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்தவும், அதை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்த ஏதுவாகவும், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பேருந்துகளின் தடம் அறிந்து, பேருந்து நிறுத்தங்களில் தகவல் அளிப்பதற்காக அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும். முதல்கட்டமாக, 500 பேருந்து நிறுத்தங்களை இணைத்து, தட வரைபடங்கள், வரவிருக்கும் பேருந்து பற்றிய தகவல்களும் இதர வசதிகளும் கொண்ட பொதுத் தகவல் முறை அமைக்கப்படும். படிப்படியாக மாநகரத்தில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.