

உணவுப் பழக்க வழக்க மாற்றத்தால் இந்தியாவில் உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கோவை ஜெம் மருத்துவமனை ரோபோடிக் அறுவைசிகிச்சை மைய திறப்பு விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் 3டி, 4கே மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை மையத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் வித்யாசகர்ராவ் மையத்தை திறந்து வைத்தார். பாரதீயவித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், ஜெம் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு, நிர்வாக இயக்குநர் ஜெயா பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், வித்யாசாகர்ராவ் பேசியதாவது: மருத்துவர்கள் சமூகத்துக்கு தங்களது மருத்துவப் பணியை சேவையாக செய்து வருகிறார்கள். தற்போதுள்ள நிலையில் மருத்துவ சேவைகளை வலிமையாகவும், ஒருங்கிணைந்த வகையிலும் கட்டமைக்க வேண்டியுள்ளது. குடிமக்களின் உடல்நலமே நாட்டின் சொத்தாகும். எனவே உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நாட்டின் மருத்துவத் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நவீன மருத்துவ வசதிகள் பெரும்பாலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையிலேயே உள்ளன. இது மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும். மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த மருத்துவமனைகள் உதவ வேண்டும். அதன்மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள். கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் உயர் தொழில்நுட்ப மருத்துவ சேவைகளைக் கொண்டு செல்ல முடியும்.
கோவை ஜெம் மருத்துவமனை யில் கொண்டு வரப்பட்டுள்ள ரோபோடிக் 4கே மற்றும் 3டி மருத்துவ வசதியானது மக்களுக்கு பல நன்மைகளை வழங்கும். மருத்துவ நிபுணர்களுடன், உயர்தொழில்நுட்ப மருத்துவ வசதிகள் இணையும்போது, வயிறு, புற்றுநோய் பாதிப்புகள் மிக எளிதாக குணப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதன் மூலம் எளிதாக, பாதுகாப்பான, விரைவில் குணமடையக்கூடிய வகையில் அறுவைசிகிச்சைகள் இருக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த செலவில், எளிதாக மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபி முறை அறுவைசிகிச்சையானது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக உள்ளது.
உணவுப் பழக்கங்களில் ஏற்பட் டுள்ள மாற்றத்தால் இந்தியாவில் உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே, மருத்துவர்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இணைந்து மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல்ல உணவு பழக்கங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஜெம் அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச லேப்ராஸ்கோபி அறுவைசிகிச்சைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மருத்துவ உயர்தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி, சர்வதேச அளவிலான சிறந்த மருத்துவ சேவையை இந்நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.