தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி

தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி
Updated on
1 min read

தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டுவந்த வழக்குரைஞர்கள் கு.ஞா.பகத்சிங், மு.வேல்முருகன் மற்றும் இறை.அங்கயற்கண்ணி ஆகிய மூவரும் தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் 3 பேர் உயர்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரும் 2006-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என இருப்பதை திருத்தம் செய்து அந்தந்த மக்களின் தாய்மொழியே உயர் நீதிமன்றங்களின் மொழி என மாற்றம் செய்ய வேண்டும்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் 1961-ம் ஆண்டிலேயே அந்த மாநிலங்களின் மொழியான இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக மத்திய அரசு ஆக்கியது. தமிழுக்கு மட்டும் தடை விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் தாய்மொழியிலேயே சாட்சியங்கள் முதலானவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று தமிழை சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் மூவரும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனிடையே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in