

ஆர். எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாக ஐஐடி செயல்படுகிறது என்று ஐஐடி மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய சூரஜ் என்கிற ஆய்வு மாணவர் மீது சக மாணவர்கள் சிலர் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகளுடன் ஐஐடி டீன் சிவகுமார் சீனிவாசனுடன் புதன்கிழமை மாணவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஐடி மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பங்கேற்றனர் அதில் கூறியதாவது, "சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சூரஜின் மருத்துவ செலவை ஐஐடி நிர்வாகமே ஏற்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஐஐடி டீன் சிவகுமாரிடம் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவர் எங்களது அனைத்து கோரிக்கையும் நிராகரித்துவிட்டார்.
ஐஐடி நிர்வாகம் ஆ.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மாட்டுக்கறி திருவிழா அமைதியாகதான் நடத்தது. நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. சூரஜ் மீது நாகரிமற்ற முறையில் தாக்குதல் நடந்துள்ளது. சூரஜ் மீது தாக்குதல் நடத்திய மணிஷ் என்பவர் கை உடைந்ததுபோல் நாடகமாடுகிறார்.
தற்போது சூரஜ் அவசரப் பிரிவில் இருக்கிறார். சிகிச்சை முடிந்த பின்னரே அவரால் பேச முடியும். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாணவர்கள் தெரிவித்தனர்.