மயிலாடுதுறை தொகுதியில் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவேன்- மணிசங்கர் அய்யர் பேட்டி

மயிலாடுதுறை தொகுதியில் நின்றால்  நிச்சயம் வெற்றி பெறுவேன்- மணிசங்கர் அய்யர் பேட்டி
Updated on
1 min read

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சி பிரமுகர்களைக் கடந்த 2 நாட்களாக மணிசங்கர் அய்யர் நேரில் சந்தித்து, தேர்தல் நிலவரம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை அவர் அளித்த பேட்டி:

“2009-ல் நான் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மறுநாளே, அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டேன்.

கடந்த 5 ஆண்டுகளாக மயிலாடுதுறை தொகுதி மக்களுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் எனக் கேட்டு நிறைவேற்றி வருகிறேன்.

என்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வட்டத்துக்கும் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் எனக் கூறுவதெல்லாம் பொய். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பெயர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

குலாம்நபி ஆசாத் தலைமையிலான 4 பேர் கொண்ட அந்தக் குழுவினர், தமிழகத்தில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பார்கள். எனக்கு மயிலாடுதுறை தொகுதியில் மக்களிடம் ஆதரவு இருப்பதால் நான் இங்குப் போட்டியிடலாம்.

மயிலாடுதுறை தொகுதியில் நான் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதாலும், மக்களிடம் நன்கு அறிமுகம் இருப்பதாலும் என்னை காங்கிரஸ் தலைமை நிறுத்தினால், நான் வெற்றி பெறுவேன். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுமா எனத் தெரியவில்லை” என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in