Published : 05 Jan 2016 03:25 PM
Last Updated : 05 Jan 2016 03:25 PM

தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்றுவோம்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி உறுதிமொழி

மழை, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றக் கூடிய வழி இருந்தும், காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத அதிமுக ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு வலியுறுத்தினார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, "தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி எப்போது நடைபெற்றாலும், அப்போதெல்லாம் எத்தகைய கேடுகள், தீமைகள், வெள்ளப் பாழ்கள், நெருப்புக்கு இரையானார்கள் பள்ளி மாணவர்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான், இன்றைக்கு நாம் சந்தித்த உயிர்ச் சேதம்.

இந்த நிகழ்ச்சிக்கு யார் காரணம்? இந்த நிகழ்ச்சியைப் பற்றி எத்தகைய அக்கறையோடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது, எடுத்தது, எடுக்கப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளத்தான் இந்த மாபெரும் பேரணியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் சென்னை மாநகரிலே இது வரை கண்ட பேரணிகளை விட, இந்தப்பேரணி தான் - மிகப் பெரும்பாலான மக்களைக் கொண்ட பேரணி.

காரணம், அந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள், உயிரிழந்த மக்களின் குடும்பத்தார், பிள்ளை குட்டிகள் இவர்கள் எல்லாம் கடுமையான உயிர்ச் சேதங்களுக்கும் பொருள் சேதங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் காப்பாற்றக் கூடிய வழி இருந்தும், காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத அரசு - அ.தி.மு.க. அரசு என்பதை நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள்.

மக்களுக்கு தீமை பயக்கும் இந்த ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதற்கு ஆதரவாக நீங்கள் எல்லாம் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நடைபெறுகின்ற இந்த ஆட்சியினால் ஏற்பட்ட தீமைகள் ஒன்றா? இரண்டா? இங்கே ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல், வந்ததும் வராததுமாக கும்பகோணத்தில் மகாமகம் நடத்தி, அதிலே இந்தச் சகோதரிகள், ஜெயலலிதாவும், சசிகலாவும் மகாமகக் குளத்தில் குளிக்கிறேன் என்று கூறி, அவர்கள் புரிந்து அட்டகாசங்கள் - அதற்காக நடைபெற்ற வைபவங்கள் - விழா இவைகளை எல்லாம் நாம் மறந்து விடுவதற்கில்லை.

ஆகவே ஆட்சிக்கு வந்தால், பொறுப்புணர்வோடு மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணத்தோடு, இரக்க உணர்வோடு நடந்து கொள்ள வேண்டுமேயல்லாமல், யார் எக்கேடு கெட்டால் என்ன, நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என்ற வகையில், அவர்கள் வழக்கமாகச் செய்வதைப் போல எந்தவிதமான சவுகரியங்களையும் குறைத்துக் கொள்ளாமல், வழக்கமான அனுஷ்டானங்களோடு ஒரு ஆட்சியை நடத்துவதற்கு இவர்கள் யார்? தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடைபெற்றிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா ஆட்சி நடைபெற்றிருக்கிறது. பக்தவத்சலம் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. என்னுடைய தலைமையிலும் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால் எந்த ஆட்சியிலும் இப்படிப்பட்ட கொடுமைகளை யாரும் சந்தித்தது இல்லை.

ஆனால் இந்த ஆட்சியில் கொடுமைகள் நடைபெறுவது மாத்திரமல்ல; அந்தக் கொடுமைகளுக்கு வக்காலத்து வாங்கி, அவற்றை நியாயப்படுத்தி, அதைத் தொடர்ந்து நாங்களே ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிற முதல்வர் ஒருவரும், அவருக்கு தலை வணங்கக் கூடிய பட்டாளமும், அவர்கள் எல்லாம் காலில் விழுந்து நமஸ்கரித்து "தாயே, தயாபரியே, நீங்கள் தான் இந்த நாட்டை உய்விக்க வேண்டும்" என்று இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பக்தி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இது பெரியார் பிறந்த மண்ணா? பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணா? நாமெல்லாம் வாழ்கின்ற மண்ணா? இந்த நாட்டிலே எவ்வளவு கொடுமைகள் நடைபெற்றாலும், பேரழிவே நடைபெற்றாலும், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் உடைப்பெடுத்தாலும், அந்த உடைப்புக்குக் காரணம், வேறு யாருமல்ல; தாங்கள் தான் என்று சொல்லாமல் சொல்லி, இந்த நாட்டிலே மேலும் தங்களால் ஆள முடியும், தங்களால் செங்கோல் செலுத்த முடியுமென்று உரைக்கின்ற ஒரு கூட்டம் கட்சிக்கு அண்ணா பெயரை வைத்துக் கொண்டு ஆளுகின்ற கூட்டம் - அந்தக் கூட்டத்திற்கு பதில் சொல்கின்ற நாள் வெகு தொலைவிலே இல்லை.

வெகு விரைவில் அந்தக் கூட்டத்திற்கு நாம் சட்ட ரீதியாக, பாராளுமன்ற ஜனநாயக ரீதியாக பதில் சொல்லத் தான் போகிறோம்.

அந்தப் பதிலுக்காக அவர்களும் காத்திருப்பார்கள், நாமும் காத்திருக்கிறோம். அந்தப் பதிலைச் சொல்லியே தீருவோம் என்ற அந்த உறுதிமொழியை உங்களுக்கெல்லாம் உரைத்து, குறைந்த இடைவெளியில் உங்களையெல்லாம் அழைத்தோம்.

இந்த நிகழ்ச்சி முடிந்து, நீங்கள் எல்லாம் வீட்டுக்குச் சென்றதும் ஒவ்வொருவரிடத்திலும் சொல்லுங்கள். ஏன்? எங்கே போனோம்? எந்த நிகழ்ச்சிக்குப் போனோம்? கருணாநிதியின் கூட்டத்திற்குச் சென்றோம், பேராசிரியர் அன்பழகனின் பேச்சைக் கேட்கச் சென்றோம், என்று இல்லாமல் நம் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு பங்கு இருக்கிறது.

அந்தப் பங்கு தான் தமிழ்நாட்டு மக்களை எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் காப்பாற்றுகின்ற பங்கு.

அந்தப் பங்கினைச் செலுத்தச் சென்றோம், செலுத்தினோம், செலுத்திக் கொண்டே இருப்போம், தமிழ் மக்களை நாம் காப்பாற்றுவோம் என்ற அந்த உறுதியோடு விடைபெறுவோம்"

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x