Published : 27 Dec 2013 12:57 PM
Last Updated : 27 Dec 2013 12:57 PM

ரூ.20 கோடி செலவில் அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த முதல்வர் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: நலமான சமுதாயமே வளமான நாட்டிற்கு அடிப்படையாகும். மாநிலத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு நோய் சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் பொதுமக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள 8 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாய், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என 12 கோடி ரூபாயும், மற்றும் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, திருமயம், திருச்செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, குன்னூர், மன்னார்குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய 16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 50 லட்சம் ரூபாய் என 8 கோடி ரூபாயும் என மொத்தம் 20 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியும், நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x