

தரமான கல்வி மட்டுமே சமூக பிரச்சினைகளுக்கு தீர்வை அளிக்கும் என்று ‘தி இந்து’ குழுமத் துணைத் தலைவர் என்.முரளி கூறினார்.
சென்னை வடபழனி சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி சார்பில் கே.சரஸ்வதி நினைவு விருது வழங்கும் விழா சென்னை அடையாறு கிரவுன் ப்ளாசா ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, குழந்தைகள் கல்வி சார்ந்த தளத்தில் இயங்கி வரும் ப்ரதம் அறக்கட்டளையின் துணை நிறுவனர் ஃபரிதா லம்பேவுக்கு கே.சரஸ்வதி நினைவு விருதை என்.முரளி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் என்.முரளி பேசியதாவது:
சரஸ்வதி வித்யாலயா பள்ளி கல்வியை மட்டும் போதிக்க வில்லை. வணிக நோக்கமற்ற சமூகப் பொறுப்புள்ள பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. சமூக ஆர்வலர் ஃபரிதா லம்பே தனது வாழ்நாள் முழுவதையும் அடித்தட்டு, ஆதரவற்ற மற்றும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணித்துள்ளார்.
கல்வி சார்ந்த தளத்தில் மட்டுமன்றி பெண்ணுரிமை, குழந்தைத் தொழிலாளர் நடைமுறை போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதில் ப்ரதம் அறக்கட்டளை பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. கல்வியின் இன்றைய நிலைக்காக நாம் வேறு யாரையும் குறை கூற முடியாது. இது ஒட்டு மொத்த அமைப்பின் கோளாறு ஆகும். இது களையப்பட வேண்டும். தரமான கல்வி இந்த சமூகத்துக்கு சென்றடைய வேண்டும். அதன் மூலம் மட்டுமே சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ப்ரதம் அறக் கட்டளையின் துணை நிறுவனர் ஃபரிதா லம்பே பேசியதாவது:
இந்தியாவில் தற்போது 97.3 சதவீதம் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். ஆனால், கல்வியின் தரம் குறிப்பிடும்படி இல்லை. இன்றைக்கு பலரும் அரசுப் பள்ளிகளை வெறுக்கிறார்கள். ஆந்திரம், தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 64 சதவீத கிராமப்புற குழந்தைகளே தனியார் பள்ளிகளுக்குத்தான் செல்கின்றனர். மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லை. இதற்கு போலியான கவுரவம்தான் காரணம்.
அரசுப் பள்ளிகளில் தற்போது சிறந்த வசதிகள் உள்ளன. ஆசிரி யர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நமது ஆரம்பக் கல்வி முறை 50 வருடங்கள் பின் தங்கியுள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. சமூகத்தில் புறக்கணிக் கப்பட்ட பிரிவினரின் குழந்தை களுக்கு கல்வி கிடைக்க வேண்டும். மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியைச் சார்ந்தவரின் 34 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களை மீட்டு பள்ளிகளில் சேர்ந்தோம். வளர்ந்த தனியார் பள்ளிகளும் தங்களிடம் உள்ள கல்வி சார்ந்த வசதிகளை அரசுப் பள்ளி மாணவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சி.எஸ்.பிரசாத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் தலைவர் மற்றும் முதல்வர் கே.எஸ்.நடராஜன் வரவேற்புரையாற்றினார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.