

சிறிய விவசாயி, பெரிய விவசாயி எனப் பாகுபாடில்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள கடலங்குடியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கடன்வாங்கி குறுவை சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாரான நிலையில், அண்மையில் பெய்த மழையில் விளைந்திருந்த நெல் நீரில்மூழ்கி முற்றிலுமாக அழுகிவிட்டது. இதனால் மனமுடைந்த விவசாயி எல்லை மீறிய கவலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி செல்வராஜ் போன்ற விவசாயிகளை காப்பாற்ற உதவில்லை என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சேத்திலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடனுதவி செய்திருந்தால் விவசாயின் உயிர்பலி தடுக்கப்பட்டிருக்கலாம்.
சிறிய விவசாயி, பெரிய விவசாயி எனப் பாகுபாடில்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
தற்போது விவசாயி செல்வராஜை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதுடன், அவரது விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.