

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும், பேரறிவாளன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அற்புதம்மாள் கூறியதாவது: "23 ஆண்டுகளாக இந்த தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருந்தேன். இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ப.சதாசிவத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மகன் செய்யாத தவறுக்காக 23 ஆண்டுகள் சிறையில் வேதனைப்பட்டிருக்கிறான். அந்த கொலையில் என் மகலுக்கு எந்த தொடர்பும் இல்லை. என் மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.
தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும், எனது போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.
மேலும் அடுத்த கட்டமாக பேரறிவாளன் விடுதலைக்காக போராடுவோம், ஆனால் அதற்காக போராட வேண்டிய அவசியம் இருக்காது என தான் நம்புவதாகவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.