

தமிழகத்தின் மீது ‘இஸ்ரோ’ பாராமுகமாக வும் கசப்புணர்வுடனும் நடந்து கொள்கிறதோ என திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி திரவ எரிவாயு மையத்தில் பணிபுரிவோர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு அனுப்பிய வேண்டுகோளை பரிந்துரை செய்து, கடந்த ஆகஸ்டில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரி வாயு தொழில்நுட்ப மையம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகர ப்பட்டினத்தில், ‘இஸ்ரோ’வின் சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்தியாவுக்குப் பெருமையையும், மகிழ்ச்சியையும் தேடித் தந்துள்ள ‘இஸ்ரோ’, தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து கசப்புணர்வோடும் பாராமுகமாகவும் நடந்து கொள்கிறதோ என்ற ஐயப்பாடு நிலவுகிறது.
கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களின் செல்வாக்குதான் ‘இஸ்ரோ’வில் அதிக மாக உள்ளது. தமிழகத்துக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர் செயல்படுகின்றனர். ராக்கெட் தயாரிப்பில் 60 சதவீதப் பணிகள், தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆள் எடுக்கும் பணிகளோ திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகிறார்கள்.
புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கான இடம் தேர்வு செய்ய பேராசிரியர் நாராயணா தலைமையில் ஒரு குழு அமைத்தனர். அந்தக் குழுவில் இடம் பெற்றவர்களில் நான்கு பேர் ஆந்திராவையும், இரண்டு பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழர்.
இந்தக் குழு குலசேகர ப்பட்டினத்தை ஆய்வு செய்யவே இல்லை. புதிய இடத்துக்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்த ‘இஸ்ரோ’ அதிகாரிகள், தமிழக முதல்வரைச் சந்திக்கவே இல்லை என்கிறார்கள்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நேரடியாக 4 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் இருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.