

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் சதுர்த்தியன்று காலை 10.30 மணிக்கு விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து குளக்கரையில் அங்குசத் தேவருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்குசத் தேவர் மூன்று முறை குளத்தில் மூழ்கி எழுந்தார்.
தொடர்ந்து விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். பிற்பகல் 2 மணிக்கு 18 படியில் பச்சரிசி, வெல்லம், கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, எள் ஆகியவற்றில் தயாரான ராட்சத கொழுக்கட்டை மூலவருக்கு படைக்கப்பட்டது. இரவு பஞ்சமூர்த்தி களின் வீதி உலா நடைபெற்றது.