போர் பாதிப்பால் வதைபடும் பெண்கள்: இலங்கை மனித உரிமை போராளி வேதனை

போர் பாதிப்பால் வதைபடும் பெண்கள்: இலங்கை மனித உரிமை போராளி வேதனை
Updated on
2 min read

இலங்கை மனித உரிமைகள் போராளி நிமல்கா பெர்னாண்டோ சொந்த வேலையாக சென்னை வந்திருந்தார். அவரை ‘தி இந்து’ சார்பில் சந்தித்தோம்.

போருக்கு பிந்தைய இலங்கை எப்படி உள்ளது?

உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ந்திருக்கின்றன. ஆனால் இஸ்லாமியர், கிறித்தவர் மீதான தாக்குதல், புத்பாலசேனாவின் எழுச்சி இவை யெல்லாம் இலங்கை அரசு அமைதியின் விதைகளை தூவ தவறிவிட்டது. இலங்கை அரசு மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு நெருக்கமான ஒரு சிலரைத் தவிர ஒவ்வொரு இலங்கையரும் துன்பத்தில் வாடுகின்றனர்.

ஒவ்வொரு இலங்கையரும் எனும் போது சிங்களர்கள், தமிழர்கள் இரு இனத்தவரையும் குறிப்பிடுகிறீர்களா?

சிங்களரின் போராட்டத்தையும் தமிழர்களின் போராட்டத்தையும் ஒப்பிட முடியாது. ஆனால் ஒரு சாதாரண சிங்களரின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80% பெண்களே உள்ளனர். அவர்கள் தங்களது கணவர்களுடன் விவசாயத்திலோ, மீன்பிடி தொழிலிலோ உதவி செய்து வாழ்ந்து வந்தவர்கள்.

தற்போது அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் ராணுவத்தின் கையில் உள்ளது. அவர்களால் புதிதாக ஏதும் தொழில் தொடங்கி வாழ வழியில்லை. தெற்கில் வாழும் சிங்கள பெண்ணின் வாழ்வை விட இவர்களது வாழ்க்கை மோசமானது.

வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை தனியாக விட்டு வேலைக்கு செல்வது இயலாது. தங்கள் நகைகளை அடமானம் வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. கூட்டத்தில் தீர்மானம் பற்றி...

2012-ல், 2013-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தி லிருந்து இது அடுத்த கட்டமாகும். இது வரை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இலங்கை ஐ.நா.வின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமில்லை. உலக அளவில் இந்த நூற்றாண்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரம். தற்போது ஆதாரங்கள் வெளிவருகின்றன, அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஐ.நா.வாக இருந்தாலும் தவறு செய்தால் பதில் கூற வேண்டும்.

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய ஐ.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை ஐ.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை.ஐ.நா. இப்படி செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது.

உலக அளவில் மனித உரிமை விவகாரங்களை பேச ஐ.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கி விடக் கூடாது. இந்த மாதம் சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் இயற்றப்படும் என்று நம்புகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in