டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக வாபஸ்

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக வாபஸ்
Updated on
1 min read

டெல்லியில் 41 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 41-வது நாளை எட்டியது.

இந்நிலையில், மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை விவசாயிகள், தமிழக முதல்வரிடம் அளித்தனர். அந்த கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், '' முதல்வர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம். மே 25 முதல் மீண்டும் போராட்டம் நடைபெறும். எங்கள் போராட்டத்துக்கு துணை நின்ற, ஆதரவளித்த தமிழக தலைவர்களுக்கு நன்றி'' என்று அய்யாகண்ணு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in